"நான் இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது.." - நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!
அமெரிக்கா–ஈரான் இடையே மேற்கு ஆசிய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இதே நேரத்தில், ஜி-7 உச்சிமாநாட்டில் கத்தார் அமீரை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், ‘நான் இல்லையெனில் இஸ்ரேல் நாடே இருக்காது’ என்று கூறி, நெதன்யாகு லெபனான் விவகாரத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் ; m. மீரா
மேற்கு ஆசியாவில் நடந்த மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட ஆரம்பகட்ட அறிவிப்பில் லெபனான் குறித்த குறிப்பு ஏதும் இடம்பெறாதபோதிலும், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
வாஷிங்டனுடனான எந்தவொரு போர்நிறுத்த ஏற்பாட்டிலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரானும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் அந்த நிலைப்பாட்டில் முரண்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர இஸ்ரேல் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரான்ஸின் எவியன் (Evian) நகரில் நடைபெறும் ஜி-7 (G7) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக கத்தார் அமீர் தமிம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”நான் இல்லாவிட்டால் இஸ்ரேல் இருந்திருக்காது; ஏனெனில், நான் செய்ததைச் செய்ய வேறு எந்த அதிபரும் முன்வரவில்லை” என்று கூறியுள்ளார்.நெதன்யாகுவுடனான தனது நல்ல உறவை ஒப்புக்கொண்ட அதேவேளையில், லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு மேலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - லெபனான் போரைச் சிறிய அளவிலான போர் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரான் விவகாரமே பெரியது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவ்வப்போது தலைதூக்கும் ஒரு சிறிய தொல்லை அல்லது எரிச்சலூட்டும் விஷயமாக ஹிஸ்புல்லா உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - லெபனான் மீது நடத்தும் தாக்குதலால் அதிகமான மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், ஒருவரைத் தேடும்போதெல்லாம் நீங்கள் ஓர் அடுக்குமாடி குடியிருப்பையே இடித்துத் தள்ள வேண்டியதில்லை; ஏனெனில், அந்தக் குடியிருப்புகளில் ஏராளமான மக்கள் வசிக்கிறார்கள் - அவர்கள் எல்லாரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறியுள்ளார். மேலும் ஹிஸ்புல்லாவை எதிர்கொள்ளும் பொறுப்பை சிரியாவிடம் ஒப்படைக்குமாறு இஸ்ரேலிடம், தான் பரிந்துரைத்ததாகவும் இஸ்ரேல் - லெபனான் மோதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தத்தைப் பாதிக்காது எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

