50,000 ராணுவ வீரர்கள் ரெடி.. அமெரிக்கா தரைவழி தாக்குதலா? கார்க் தீவில் போருக்கு தயாராகும் ஈரான்!
செய்தியாளர் - M. மீரா
ஈரானின் புஷேர் மாகாணத்தில், கடற்கரையிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கார்க், ஈரானின் எண்ணெய் தொழிலின் இதயமாகும். இந்தத் தீவை ஈரானின் மணிமகுடம் என்று கூறுகிறார்கள். ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க், பிரதான நிலப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அதன் ஆழமான நீர்நிலைகள், மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் கூட நங்கூரமிட்டு ஏற்றுவதற்கு அனுமதிக்கின்றன.
ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அல்லது முற்றுகையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். இதன்மூலம் ஈரானியப் பொருளாதாரத்தை முடக்கி, ஹார்முஸ் நீரிணைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
கார்க் (Kharg) தீவைக் கைப்பற்றும் முயற்சி உட்பட, தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் , ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய பலத்த பாதுகாப்பு கொண்ட 'பிக்ஆக்ஸ் மலை' (Pickaxe Mountain) வளாகத்தைத் தாக்குதல் அல்லது தரைவழி தாக்குதல்களை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து அமெரிக்கத் தலைவர் பரிசீலித்து வருகிறார் என்று 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்ட சமீபத்திய செய்தி அறிக்கை கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து, முக்கிய எண்ணெய் வளக் கிடங்கான கார்க் தீவைக் கைப்பற்றும் எந்தவொரு முயற்சிக்கும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அமெரிக்கப் படைகள் தரைவழியாகப் படையெடுத்தால், அவர்களை வரவேற்பதற்காக ஈரானில் உள்ள மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவால் கார்க் தீவைக் கைப்பற்ற முடியுமா?
அமெரிக்கா கார்க் தீவைக் கைப்பற்றினால், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இது இறுதியில் ஈரானின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஈரானியத் தீவுகளைக் கைப்பற்றும் இராணுவத் திறன் அமெரிக்காவிடம் உள்ளது. சரியான திட்டமிடல் மூலமும் கார்க் தீவை கைப்பற்றலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
போதுமான வான், கடற்படை மற்றும் நீர்நிலப் படை பலம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய பதற்றத்தை எதிர்கொள்ளும் விருப்பம் இருந்தால், அமெரிக்காவால் ஒரு சிறிய ஈரானியத் தீவைக் கைப்பற்ற முடியும்,
பெரிய மற்றும் நிரந்தரத் தளங்கள் மற்றும் சிறிய முன்னணித் தளங்களில் சுமார் 50,000 அமெரிக்கப் படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் அமெரிக்கா ஒரு விலையைக் கொடுக்க வேண்டி வரும் . ஒரு தீவைத் தற்காலிகமாகக் கைப்பற்றுவது என்பது, வேறு அதைத் தன்வசம் வைத்திருப்பதும் அதிலிருந்து முக்கிய பலன்களை பெறுவது என்பது வேறு என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கார்க் தீவு என்பது என்ன? அது ஈரானுக்கு ஏன் முக்கியம்?
கார்க் தீவு ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவிலும், ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து சுமார் 483 கி.மீ வடமேற்கிலும் அமைந்துள்ளது. கார்க் தீவு ஏராளமான எண்ணெய் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது. இங்குள்ள அபூசர், ஃபோரூசான் மற்றும் டோரூட் ஆகிய மூன்று பெரிய கடல் வயல்களிலிருந்து கச்சா எண்ணெய் முனையத்தை அடைகிறது. தீவுடன் இணைக்கப்பட்ட குழாய்கள் ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களுடன் கடல் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இது ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதிக்கான ஏற்றுமதி முனையமாக செயல்படுகிறது.
ஈரானின் எண்ணெய் வலையமைப்பில் இந்தத் தீவு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இது ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தால் நடத்தப்படும் மூன்று முக்கிய எரிசக்தி வசதிகளையும் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று ஃபாலத் ஈரான் எண்ணெய் நிறுவனம் ஆகும், இது தினமும் 500,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது

