தொடர் மிரட்டல்.. டிரம்பை எங்கே கொல்வது? வீடியோ வெளியிட்ட ஈரான்.!
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் உச்சத் தலைவர் அலி காமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்யும் மிரட்டலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. IRGC-இன் ‘ஃபார்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், டிரம்பின் மார்-ஏ-லாகோ பயணப் பாதை, அச்சுறுத்தலுக்குரிய பாலம் உள்ளிட்ட விவரங்கள் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் - M. மீரா
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத்தலைவர் அலி காமேனி, மற்றும் அவரது குடும்ம்பத்தினர் சிலரும் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய மிரட்டல் விடுத்து வருகிறது ஈரான்.
ஈரானின் புரட்சிகரப் படைப் பிரிவுடன் (IRGC) தொடர்புடைய 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம், "டிரம்ப்பை நாம் எங்கே கொல்வது?" என்ற தலைப்பில் காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
இக்காணொளி அந்நிறுவனத்தின் டெலிகிராம் சேனல் உட்படப் பல தளங்களில் பதிவிடப்பட்டது. X சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த அந்த காணொளி, பின்னர் நீக்கப்பட்டதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.
புளோரிடாவில் உள்ள தனது 'மார்-ஏ-லாகோ' (Mar-a-Lago) இல்லத்திற்குச் செல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் வாகன அணிவகுப்புப் பாதையை இக்காணொளி காட்டுவதாகக் கூறப்படுகிறது; மேலும், அப்பாதையில் உள்ள ஒரு பாலத்தை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய இடமாகவும் அது சுட்டிக்காட்டுகிறது.
முன்னதாக, ஈரானிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் டிரம்பை கோல்ஃப் மைதானத்தில் வைத்து தாக்குவது போன்ற அனிமேஷன் வீடியோக்களும், வாடகைக்கு ஆட்களை அமர்த்தி அவரைத் தாக்க தீட்டப்பட்ட சதி தொடர்பான ரகசிய கேமரா (hidden camera) வீடியோக்களும் வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இந்த பகிரங்க அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு (Secret Service) டொனால்ட் டிரம்புக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், சமூக வலைதளங்களில் வெளியாகும் இத்தகைய அச்சுறுத்தல் வீடியோக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப், ஈரான் தன்னை குறிவைப்பதாகக் கூறியதுடன், "ஈரானின் படுகொலைக்கான பட்டியலில் நான் முதலிடத்தில் உள்ளேன்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
