Cognizant, Infosys, TCSக்கு தடையா? ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. IT தொழிலாளர்களுக்கு சிக்கல்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். அமெரிக்காவில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் வெளிநாட்டவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும், அமெரிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் PERM எனப்படும் (Permanent Labor Certification) திட்டம் மூலம் நிரந்தரக் குடியுரிமை பெறுவது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த நிலையில், பல்வேறு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் PERM திட்டத்தின் மூலம் GREEN CARD எனப்படும் நிரந்தரக் குடியுரிமை கோரும் திட்டத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட்(Microsoft), அடோப் (Adobe), காக்னிசென்ட் (Cognizant), காப்ஜெமினி (Capgemini) மற்றும் இந்திய ஐடி முன்னணி நிறுவனங்களான இன்ஃபோசிஸ் (Infosys), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS/Tata), விப்ரோ (Wipro), ஹெச்.சி.எல் (HCL) ஆகிய நிறுவனங்கள் இந்த தற்காலிக தடை பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இதன் காரணமாக இந்த நிறுவனங்களில் H-1B விசாக்களில் பணிபுரியும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் GREEN CARD எனப்படும் நிரந்தரக் குடியுரிமை கோருவதற்கு இனி விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இந்த நடவடிக்கை ஏற்கெனவே H-1B விசாவில் பணியாற்றுபவர்களைப் பாதிக்காது என்பதும், அவர்கள் உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை வராது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில் நிறுவனங்கள் புதிய H-1B விசாக்கள் வழங்குவதிலும் இந்த தடை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (J.D.Vance), மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான H-1B விசா மற்றும் கிரீன் கார்டு சான்றிதழ்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை நியமித்ததன் மூலம் மோசடி செய்துள்ளன என்று விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு H-1B ஊழியர்களைப் பணியமர்த்துவதை தடுக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்த PERM திட்டத்தின் மூலம் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்திய மென்பொருள் பொறியாளர்கள் எண்ணிக்கையே அதிகம் என்பதால் இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

