திருமண வீட்டில் தாக்குதல்.. அமெரிக்காவின் ‘கொடுமையான குற்றம்’.. பதிலடி கொடுக்க ஈரான் உறுதி!!
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலின் ஆதரவோடு அமெரிக்கா படையெடுத்தது. ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதே நேரம் ஈரான் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை முடக்கிய நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மோதலை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்புகள் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனால், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளுடன் கூடுதலாக, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான புதிய தடைகளை அமெரிக்கா விதித்திருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றன.
இந்தச்சூழலில் தான், ஹார்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள ஈரானின் சிரிக் பகுதியில், திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதில் அந்தக் கட்டடம் கடுமையாக சேதமடைந்ததுடன், 2 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 50-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
இந்தச்சூழலில் தான், ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baqaei), அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளில் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்காவின் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கின்றனர்.
வெடிகுண்டைவிட ஆபத்தானது, குண்டுவீச்சை ஒரு சாதாரண நிகழ்வாக ஏற்றுக்கொள்வதுதான். இன்று மௌனமாக இருப்பவர்கள் நாளை அதன் விளைவுகளிலிருந்து தப்பித்துவிட முடியாது. அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அதை அடக்கிவிடாது; அது குற்றவாளிகளுக்கு மேலும் தைரியத்தையே அளிக்கும் என அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக சர்வதேச நாடுகள் மௌனம் காப்பதாக இஸ்மாயில் பாகாயி விமர்சித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் தான், ஏற்கனவே பதற்றத்தில் இருந்த அமெரிக்கா ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

