\
Nepal
NepalPT Digital

நேபாள வெள்ளத்தில் நெஞ்சம் பதறும் கொடூரம்.. இறந்த உடல்கள் இப்படியா மீட்கப்படுகின்றன?

தோண்டத்தோண்ட சடலங்கள்... அழுகும் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை... மீட்புக்குழுவினரால் சென்றடைய முடியாத இடங்களில் சிதறிக் கிடக்கும் உடல்களை Drone-கள் மூலம் மீட்கும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நேபாளம்.
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மலைப்பகுதிகளில், வான்வழிப் புகைப்படம் மற்றும் நிலவரைபடம் தயாரிப்பது போன்ற வழக்கமான பணிகளைத் தாண்டி, Drone-கள் தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.

மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாகச் செல்ல முடியாத ஆபத்தான நிலப்பரப்பு காரணமாக, நுவாகோட் மாவட்டத்தின் தேவிகாட்-3 பகுதியில் இருந்து இந்த வாரம் மட்டும் 7 உடல்கள், Drone-கள் மூலம் தேவிகாட்-5 பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள காவல்துறை, ராணுவம் மற்றும் Drone தயாரிப்பு நிறுவனமான GarudX-ஐ சேர்ந்தவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்வது, வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடுவது, மீட்புப் பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களிலிருந்து உடல்களை எடுத்துச் செல்வது என பேரிடர் மீட்பில் Drone-களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.

Nepal
சீனாவுக்கு ஏற்கெனவே தெரியும்.. வெள்ளம் குறித்து நேபாளம் கேட்ட தகவல்.! மூடி மறைத்ததா சீனா?

தேவிகாட்-3 பகுதியில் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இயங்கிய Drone-கள், தொடர்பு துண்டிக்கப்பட்ட கிராம மக்களிடம் ஒலிபெருக்கி மூலம் தண்ணீர், உணவு, மருந்து உள்ளதா எனக் கேட்டது. அவர்கள் கைகளை உயர்த்தி அளித்த பதில்களின் அடிப்படையில் தேவைகளை மதிப்பிட்டு, Drone-கள் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டன. மூன்று நாட்களில் குறைந்தது 1.5 டன் அவசரப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தால் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படும் அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தின் சுரங்கத்திற்குள் Drone அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுரங்கத்தில் நீரும் பாறைகளும் நிரம்பியிருந்ததாகவும், உயிருடன் இருப்பவர்களுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தில் சுமார் 900 நீர்மின் நிலைய தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2015 நிலநடுக்கத்துக்குப் பிறகு பேரிடர் மீட்பில் Drone-களின் பயன்பாடு வளரத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மனிதர்கள் செல்ல முடியாத ஆபத்தான பகுதிகளுக்கு உணவு, மருந்து மற்றும் மீட்பு உதவிகளை குறைந்த செலவில் கொண்டு சேர்க்கும் முக்கிய கருவியாக Drone-கள் உருவெடுத்துள்ளன. எனினும், Drone-களின் பளு தூக்கும் திறன், பயண தூரம் மற்றும் வானிலை ஆகியவை அவற்றின் பயன்பாட்டுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. பேரிடர் காலங்களில் உயிர்களை காக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் பரவலாகப் பயன்படுத்த உரிய கொள்கைகள் தேவை என்பதையே நிபுணர்கள் தற்போது வலியுறுத்துகின்றனர்.

Nepal
நேபாளம் பேரிடர் போல்.. வரலாற்றில் 26ஆம் தேதிகளில் ஏற்பட்ட கொடூர இயற்கைச் சீற்றங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com