அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இரு கட்சிகள்.. தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
அமெரிக்காவின் பழமையான கட்சியான ஜனநாயகக் கட்சி 1828ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு 26 ஆண்டுகள் கழித்து அதாவது 1854ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சின்னம் கழுதை ஆகும். இவர்கள் நீல நிறத்தைத் தங்கள் கட்சியைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். குடியரசுக் கட்சியின் சின்னம் யானை ஆகும். இவர்கள் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜனநாயகக் கட்சி இடதுசாரி சாய்வு கொண்ட தாராளவாத சித்தாந்த அடிப்படையிலானது. மறுபுறம் குடியரசுக் கட்சி வலதுசாரி சாய்வு கொண்ட பழமைவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.
பொருளாதாரம், சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், குடியேற்றம், கருக்கலைப்பு, துப்பாக்கி உரிமம் போன்ற பல்வேறு விவகாரங்களில் இக்கட்சிகள் முரண்பட்ட கருத்து கொண்டவை ஆகும். ஜனநாயகக் கட்சி நகர்ப்புறங்கள், கடலோர மாகாணங்கள், இளம் தலைமுறையினர், பல்வேறு சமூகத்தினரிடம் அதிக ஆதரவு கொண்டது. கிராமப்புறப் பகுதிகள், தெற்குப் பகுதிகளில் அதிக ஆதரவைக் கொண்ட குடியரசுக் கட்சி வெள்ளையினத்தவரிடையே அதிக ஆதரவு பெற்ற கட்சி ஆகும்.
அமெரிக்க அதிபர்களில் ஆபிரகாம் லிங்கன், ரொனால்டு ரீகன், ஜார்ஜ் புஷ், ட்ரம்ப் உட்பட 19 பேர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். ஜனநாயகக் கட்சியிலிருந்து ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி, பில் கிளின்டன், ஒபாமா, ஜோ பைடன் உட்பட 17 பேர் அதிபர்களாகியுள்ளனர். மற்ற கட்சிகளில் இருந்து பிற அதிபர்கள் வந்துள்ளனர்.

