உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் அமெரிக்கா.. 115 மில்லியன் டாலர் செலவில் அதிநவீன ஆயுதங்கள்!
FIFA உலகக் கோப்பை மற்றும் அமெரிக்காவின் 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்களையொட்டி பாதுகாப்பை வலுப்படுத்த, ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா 115 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சுதந்தரம் பெற்றதன் 250ஆவது கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ள நிலையிலும், பாதுகாப்பை அந்நாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ட்ரோன்களை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக உளவுத் தகவல்கள் வந்துள்ள நிலையில், அதைச் சமாளிக்க 115 மில்லியன் டாலர் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கால்பந்து போட்டிகளைக் காண, லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து குவிவார்கள் என்பதால் பாதுகாப்பு அபாயமும் எழுந்துள்ளது.
இவற்றைச் சமாளிக்க ட்ரோன் எதிர்ப்பு கருவிகள், பாதுகாப்பு மென்பொருட்கள், லேசர் கருவிகள், மைக்ரோவேவ் கருவிகள், இயந்திர துப்பாக்கிகள் என ஏராளமான தற்காப்புச் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்களில் எந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப் போகிறது என்பதை DHS குறிப்பிடவில்லை. உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் 11 மாநிலங்களுக்கு எதிர்-ட்ரோன் தொழில்நுட்பங்களை வாங்க 250 மில்லியன் டாலர்களை வழங்கியதாக DHS இன்கீழ் இயங்கும் ஃபெடரல் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கூறிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

