\
Tech outage in US
Tech outage in US AI generated image

அமெரிக்காவில் அடுத்தடுத்து முடங்கும் விமானங்கள், வங்கிகள்.. வேலை நீக்கங்களால் வந்த ஆபத்தா?

வேலைநீக்கங்களால் நிர்வாக குறைபாடுகள்: அமெரிக்காவின் டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!
Published on: 
Summary

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளில் ஏற்பட்ட சேவை முடக்கங்கள் அமெரிக்காவின் டிஜிட்டல் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிக்கொணர்கின்றன. வேலைநீக்கங்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் குறைபாடுகள் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக விமான நிறுவனங்கள், வங்கிகள், அரசு அமைப்புகள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகள் அடுத்தடுத்து முடங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை முதல் அமெரிக்காவில் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் முதலில் முடங்கின. தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவால் நாடு முழுவதும் விமான சேவைகள் சுமார் 4.5 மணி நேரம் நிறுத்தப்பட்டன.

airport
airport reuters

இதற்கிடையே, ஜேபி மோர்கன் வங்கியின் சில சேவைகளும் பாதிக்கப்பட்டன. யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 150 விமானங்கள் தாமதமாகின. ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட், ஆப்பிள் பே சேவைகளும் பாதிக்கப்பட்டன. தேசிய பாதுகாப்பு அமைப்பான NSA என்எஸ்ஏவின் நெட்வொர்க்கிலும் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது.

இந்தத் தொடர் தொழில்நுட்ப முடக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒரு நாடு பெரியதாகவும், சக்திவாய்ந்ததாகவும், அதிக பணம் கொண்டதாகவும் இருக்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இதில் கவலைப்பட ஒன்றுமில்லை எனக் கூறி பிரச்சினையைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.

Trump & Marco Rubio
Trump & Marco Rubioreuters

இந்தப் பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அமெரிக்கா மீது ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் தாக்குதல் நடைபெறவில்லை. ஒவ்வொரு சம்பவமும் தனித்தனியானவை எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் தொடரும் தொழில்நுட்ப முடக்கங்களுக்கு, நிறுவனங்களின் தொடர் வேலைநீக்கங்களும் வேகமான தொழில்நுட்ப மாற்றங்களும் மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மைக்ரோசாஃப்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, தனது உலகளாவிய ஊழியர்களில் 25% பேருக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்திருந்தது.

United Airlines AI தொழில்நுட்ப வளர்ச்சியால் நிர்வாகப் பணியாளர்களின் எண்ணிக்கையை 4% குறைத்ததாகவும், மேலும் 4% குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

microsoft
microsoft reuters

Federal Aviation Administration (FAA) – அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம். ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு பணியாளர் குறைப்புகளைச் சந்தித்திருந்தது. அதன் நவீனமயமாக்கல் திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை எனச் சட்டமியற்றுபவர்கள் முன்பே எச்சரித்திருந்தனர்.

அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறையும்போது, தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்வதிலும் அவசரநிலைகளைக் கையாள்வதிலும் பாதிப்பு ஏற்படலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனினும், வேலைநீக்கங்களுக்கும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை

Tech outage in US
3 வல்லரசுகள்.. வரலாற்றில் முதன்முறையாக ட்ரம்ப், ஜின்பிங், புதின் சந்திப்பு.. எதற்காக?