'நைல் முதல் யூப்ரடீஸ் நதி வரை..' இஸ்ரேலுக்கு சொந்தம் கொண்டாடிய அமெரிக்க தூதர்!
பைபிள் அடிப்படையில் மத்திய கிழக்கின் ஒரு பரந்த பகுதியை இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட 14 அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அமெரிக்க வர்ணனையாளர் டக்கர் கார்ல்சனுடனான ஒரு நேர்காணலின்போது, ஹக்காபியிடம்,”பைபிளின் படி முழு மத்திய கிழக்கு என்று ஹோஸ்ட் கூறிய ஒரு பகுதிக்கு, இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதா” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”நைல் நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையிலான பகுதிகள், பைபிளின் கூற்றுப்படி இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்றும், அந்த முழுப் பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றினாலும் தவறில்லை” என்றும் கூறினார். இந்தக் கருத்துக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான், கத்தார், குவைத், ஓமன், பக்ரைன், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட 14 அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என்றும் அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக, அந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ”ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை உட்பட அரபு நாடுகளுக்குச் சொந்தமான பிரதேசங்களின் மீது இஸ்ரேல் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது" என அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கருத்துகள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன. காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் திட்டத்திற்கு நேரடியாக முரணானது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி அல்லது வேறு அரபு நிலங்களின் மீதும் இஸ்ரேலுக்கு எந்த இறையாண்மையும் இல்லை. மேற்குக் கரையை இணைப்பதற்கோ அல்லது காஸா பகுதியிலிருந்து பிரிப்பதற்கோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, தான் கூறியது மிகையாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்து என்றும், இஸ்ரேல் அண்டை நாடுகளின் நிலங்களைக் கைப்பற்ற விரும்பவில்லை என்றும் ஹக்காபி விளக்கமளித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் இணைப்பதற்கு ஹக்காபி அடிக்கடி தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

