அமெரிக்க ராணுவ விமானம் விபத்து.. 4 வீரர்கள் உயிரிழப்பு!.. சுட்டு வீழ்த்தப்பட்டதா.?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையில், ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்துக்கு உள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா காமேனி கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி டெஹ்ரானிக் உள்ள அவரது அலுவலகத்தில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த மரணத்திற்கு பதிலடி கொடுப்பதாக தெரிவித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், ஈராக்கின் மேற்குப் பகுதியில், அமெரிக்காவின் KC-135 ரக எரிபொருள் நிரப்பு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 2 பேர் காயமடைந்திருப்பதாகவும் அமெரிக்க கட்டளையகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், 2 விமானங்கள் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தது அப்போது, நடந்த எதிர்பாராத விபத்தின் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஈரானின் தாக்குதல் காரணமல்ல எனவும் தெரிவித்திருந்தது. மேலும், மற்றொரு விமானம் சுமூக தரையிறங்கியதாகவும் கூறியிருக்கிறது.
அதேசமயம், இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஈரான் அரசு தொலைக்காட்சி, ஈராக்கைச் சேர்ந்த ஈரானின் ஆதரவுக் குழு ஒன்று நடத்திய தாக்குதலிலேயே அமெரிக்க போர் விமானம் வீழ்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே, இப்போரில் அமெரிக்கா 3 போர் விமானங்களை இழந்திருந்த நிலையில், இது 4 வது விமானம் ஆகும். இந்த விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது.

