100 நாடுகளில் அதிகரித்த ராணுவச் செலவுகள்.. ஐ.நா அறிக்கை!
உலக நாடுகள் ராணுவத்துக்குச் செலவழிக்கும் தொகை கடந்த ஆண்டு புதிய உயரத்தை எட்டியதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.
ராணுவச் செலவுகளில் ஒரு சிறிய பகுதியைப் பிற துறைகளுக்குத் திருப்பிவிட்டால் மனிதகுலத்தின் மிகப்பெரிய பிரச்னைகள் பலவற்றை தீர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2024ஆம் ஆண்டில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவச் செலவினம் இதுவரை இல்லாத அளவு 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்தத் தொகை 238.34 ட்ரில்லியன். ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ஆகும்.
2023இல் உலக நாடுகளின் ராணுவச் செலவினம் 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் சுமார் 257 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 100க்கு மேற்பட்ட நாடுகள் ராணுவச் செலவுகளை அதிகரித்துள்ளன. உலக நாடுகளில் அமெரிக்கா 997 பில்லியன் டாலர்களை ராணுவத்துக்குச் செலவழித்துள்ளது. 314 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்துக்குச் செலவழித்துள்ளது சீனா. இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவைவிட முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகச் செலவழித்துள்ளது. 149 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ரஷ்யா மூன்றாம் இடத்திலும் 88.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஜெர்மனி நான்காம் இடத்திலும் உள்ளன. 86.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்துக்குச் செலவழித்துள்ள இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.
2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் மேற்கொண்டுள்ள ராணுவ செலவுத் தொகையின் 10 விழுக்காடு அதாவது, 270 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருந்தால் உலக அளவில் தீவிர வறுமையை ஒழித்துவிட முடியும். 4.22 விழுக்காடு அதாவது, 114 பில்லியன் டாலர்களில் 140 நாடுகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் மற்றும் துப்புரவுச் சேவைகளை வழங்கிவிட முடியும். 3 விழுக்காடு அதாவது, 93 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒவ்வோர் ஆண்டும் செலவழித்தால் 2030க்குள் உலகில் பட்டினியை முற்றிலும் ஒழித்துவிட முடியும். 3.6 விழுக்காடு அதாவது, 97 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் கல்வி நிதிப் பற்றாக்குறையை சரி செய்துவிடலாம்.
கடந்த பத்தாண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த ராணுவச் செலவினத்தின் 5 விழுக்காடு தொகையான 1.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னையை முற்றிலும் களைந்துவிட முடியும். உலகின் மொத்த ராணுவச் செலவுகளில் 15 விழுக்காட்டை ஒதுக்கினால் உலகின் வளரும் நாடுகளைக் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துவிட முடியும். உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுகான செலவுகளைவிட 30 மடங்கு அதிகமாக ராணுவத்துக்குச் செலவழிக்கின்றன.