ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்file image

ராணுவச் செலவு அதிகரிப்பு... இந்தியா 4வது இடம்! காரணம் என்ன?

ராணுவத்துக்காகக் கடந்த ஆண்டு அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
Published on

ஒரு நாட்டின் பாதுகாப்பு அரணாய் விளங்குவதில் ராணுவமே முதலிடம் வகிக்கிறது. அதற்காக, அதிக அளவில் செலவிடப்படுகிறது. இது சமீபகாலமாக உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் (Stockholm International Peace Research Institute) அறிக்கையில்தான் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த (ஏப்ரல் 24) அறிக்கையின்படி, கடந்த ஆண்டு (2022) ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கிய நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அந்நாடு 877 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்த ஆண்டு ராணுவத்துக்காகச் செலவு செய்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 71 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளது.

இது 2வது இடத்தில் உள்ள சீனா செய்த செலவை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் . அதோடு, உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 39 சதவிகிதம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் இல்லாவிட்டால் இந்த செலவு மேலும் அதிகரித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சீனா, 292 பில்லியன் (ரூ.23 லட்சம் கோடி) அமெரிக்க டாலரைச் செலவு செய்துள்ளது. இது, கடந்த 2021ஆம் ஆண்டைவிட 4.2 சதவிகிதமும், 2013ஆண்டைவிட 63 சதவிகிதமும் அதிகம். சீனாவின் ராணுவச் செலவு தொடர்ந்து 28வது ஆண்டாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் 3வது இடத்தில் உள்ள ரஷ்யா, கடந்த ஆண்டு ராணுவத்துக்காக 86.4 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. ரஷ்யாவின் ராணுவச் செலவு கடந்த ஆண்டு 9.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது, 2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்த நிலையில், 2022இல் 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

4வது இடத்தைப் பிடித்திருக்கும் இந்தியா, கடந்த ஆண்டு 81.4 பில்லியன் டாலரைச் (6.6 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டைவிட 6.0 சதவீதம் அதிகமாகும்.

5வது இடத்தை சவூதி அரேபியா பிடித்துள்ளது. அது, 75 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைய காட்டிலும் 16 சதவிகிதம் அதிகம். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக சவூதி அரேபியாவின் ராணுவச் செலவு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதே போல் 2022இல் இங்கிலாந்து 68.5 பில்லியன் டாலர், ஜெர்மனி 55.8 பில்லியன் டாலர், பிரான்ஸ் 53.6 பில்லியன் டாலர், தென்கொரியா 46.4 பில்லியன் டாலர் ராணுவத்திற்கு ஒதுக்கி உள்ளன. ஜப்பான் 2022ல் 46 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காகச் செலவிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போராலும், அந்நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகள் செய்து வருவதாலுமே இச்செலவினங்கள் உயர்ந்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2022ஆம் ஆண்டில் உலக ராணுவ செலவினம் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது என அது தெரிவித்துள்ளது.

மேலும், ’தொடர்ந்து உயர்ந்து வரும் ராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு, மக்கள் அதிகளவில் பாதுகாப்பற்ற உலகில் வாழ்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாக உள்ளது. மோசமான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில் நாடுகள் ராணுவ வலிமையை மேம்படுத்துகின்றன’ என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com