”அடுத்த 48 மணி நேரம்.. காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்..” - எச்சரிக்கை விடுத்த ஐ.நா.!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும் இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால், அங்கு தற்போது மீண்டும் போர் நடைபெற்று வருகிறது. இதில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் செல்லாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எல்லையில், காஸாவைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலிய ராணுவத்தினர், கிட்டத்தட்ட 11 வாரங்களுக்குப் பிறகு, மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை மட்டுமே வழங்க அனுமதிக்கின்றனர். அதுவும் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராஜியம் உள்ளிட்ட நட்பு நாடுகளின் அழுத்தத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாடுகளால் காஸாவில் இருக்கும் மக்களும், குழந்தைகளும் உதவியின்றி வாடுகின்றனர். குழந்தைகளுக்கான உணவுகளை அயல்நாடுகள் வழங்கி வருகிறபோதும் அதை இஸ்ரேல் ராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. இதனால், அவர்களுடைய எதிர்க்காலம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
இதுகுறித்து கவலை எழுப்பியுள்ள ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர், ”இஸ்ரேலின் முழுமையான முற்றுகைக்குப் பிறகு, காஸாவில் குழந்தைகளுக்கான உணவு உட்பட உதவிகளை வழங்கும் லாரிகள் வெறும் 5 மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. இது, கடலில் ஒரு துளி. உதவி இன்னும் தேவைப்படும் மக்களை அது முழுமையாகச் சென்றடையவில்லை. இப்படியே உதவி கிடைக்காமல் போனால், அவர்களை நாங்கள் அடைய முடியாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இப்போது தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத தாய்மார்களுக்கு அந்தக் குழந்தை உணவை வழங்க நாங்கள் எல்லா வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
”காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் வாடும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா எவ்வாறு முடிவு செய்தது” என அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, ”தேவையை மதிப்பிடுவதற்காக மருத்துவ மையங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்கள் பணியாற்றி வருகின்றன” எனப் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாட்டுத் தலைவர்கள் காஸாவில், இஸ்ரேலின் மிக மோசமான செயல்களை கண்டித்தனர். தவிர, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர். இதைத் தொடர்ந்தே ஐ.நா.வும் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.