காஸா போர்| இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் பலி!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ஆம் கட்டம் அமல்படுத்தப்படவில்லை. எஞ்சிய பணயக் கைதிகளை உடனடியாக ஒப்படைக்கும்படி இஸ்ரேலும், காஸாவில் இருந்து வெளியேறும்படி ஹமாஸும் வலியுறுத்தியதால் 2ஆம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தது. இதையடுத்து, காஸா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காஸாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது ராக்கெட், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், காஸா முனையின் கான் யூனிஸ், ரபா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் இராணுவ உளவுத்துறைத் தலைவர் ஒசாமா தபாஷ் கொல்லப்பட்டார். இவர் போராளிக் குழுவின் கண்காணிப்பு மற்றும் இலக்கு பிரிவின் தலைவராக இருந்தார். இதற்கிடையே தெற்கு காஸாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸின் மூத்த அரசியல் பணியக உறுப்பினர் சலா அல்-பர்தாவில் கொல்லப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் சலா அல்லின் மனைவியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - காஸா இடையே மீண்டும் உருவாகியிருக்கும் போர் குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் டோரதி ஷியா, “காஸாவில் தற்போது நடந்துவரும் போருக்கும், மீண்டும் போர் தொடங்குவதற்கும் ஹமாஸே முழுப் பொறுப்பு. அமெரிக்கா வழங்கிய பாலத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருந்தால் ஒவ்வொரு உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.