வங்கதேச வன்முறை | 1,400 பேர் இறப்பு.. அதிகாரத்தில் நீடிக்க அடக்குமுறை.. ஐ.நா. அறிக்கை!
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, இடஒதுக்கீட்டுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், வன்முறைக்குக் காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தவிர, அவரைக் கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அதற்கு இந்தியா எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அவருடைய விசாவை நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், வங்கதேச வன்முறை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் ( OHCHR) ஆய்வு நடத்தியது. அதன்படி அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ’45 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 12-13 சதவீதம் பேர் குழந்தைகள். போராட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் தலைமை மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்தும் மற்றும் வழிகாட்டுதலுடன் நூற்றுக்கணக்கான பேர் நீதிக்குப் புறம்பான கொலைகள், தன்னிச்சையான கைதுகள், தடுப்புக்காவல்கள், மற்றும் சித்ரவதை ஆகியவை நடந்தன என்பதை நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் போராட்டத்தில் 834 பேர் மட்டுமே இறந்ததாக வங்கதேசத்தின் இடைக்கால அரசு கூறியிருந்தது.
அறிக்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், ”இந்த வன்முறை, வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முன்னாள் அரசாங்கத்தால் கணக்கிடப்பட்ட மற்றும் நன்கு ஒருங்கிணைந்த உத்தியாகும். அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள சில கடுமையான மீறல்கள் சர்வதேச குற்றங்களாக இருக்கலாம், அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) விசாரிக்கப்படலாம். நாங்கள் சேகரித்த சாட்சியங்களும் ஆதாரங்களும், மனித உரிமைகளின் மிகக் கடுமையான மீறல்களில் ஒன்றான, சர்வதேச குற்றங்களாகவும் கருதப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக விசாரணைக் குழு, செப்டம்பர் 16, 2024 அன்று வங்கதேசத்தில் ஒரு தடயவியல் மருத்துவர், ஆயுத நிபுணர், பாலின நிபுணர் மற்றும் திறந்த மூல ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் பணியைத் தொடங்கியது. புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட போராட்ட இடங்களைப் பார்வையிட்டனர். அவர்களின் பணி 900க்கும் மேற்பட்ட சாட்சியங்களால் நிறைவு செய்யப்பட்டது.