வங்கதேச மத வன்முறை விவகாரம்: வன்முறையை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது
வங்கதேசத்தில் மத வன்முறை பரவக் காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக இந்துக்களின் கடைகளும், வீடுகளும், கோயில்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இதை கண்டித்து வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின. ஐக்கிய நாடுகள் சபை இந்த வன்முறைகளை கண்டித்திருந்தது. இந்நிலையில் இந்த வன்முறைகள் பரவக் காரணம் என சந்தேகிக்கப்படும் இக்பால் ஹுசைன் என்ற நபரை கைது செய்துள்ளதாக வங்கதேச காவல் துறை தெரிவித்துள்ளது. 35 வயதான அந்த நபரை பாதுகாப்பு படையினரும் உளவுத் துறையினரும் விசாரித்து வருவதாகவும் வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வெளியான ஒரு தகவலை தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி தொடங்கிய வன்முறை நீடித்து வருகிறது. சமூக ஊடகங்களில் இடப்படும் வதந்திகள்தான் வன்முறை பரவக் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ள வங்கதேச அரசு சில நாட்கள் அவற்றின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ளது.