உலக வரைபடத்தில் மோசடி!!வரைபடக் காலனித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஐநா.?
உலக நாடுகளின் அளவையும், அமைவிடத்தையும் நாம் புரிந்துகொள்ள உதவும் உலக வரைபடத்திலேயே மிகப்பெரிய திரிபு இருப்பதாக பல ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் மெர்கேட்டர் வரைபடம் (Mercator Projection), பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளை அவற்றின் உண்மையான அளவைவிட சிறியதாகவும், வடக்கு மற்றும் துருவப் பகுதிகளை மிகப் பெரியதாகவும் காட்டுகிறது.
இதற்கு மாற்றாக, கடந்த 2018-ம் ஆண்டு வரைபடவியலாளர்கள் நிலப்பரப்புகளின் உண்மையான அளவை மிகவும் துல்லியமாகக் காட்டும் ‘ஈக்வல் எர்த்’ (Equal Earth) வரைபடத்தை உருவாக்கினர். இந்தசூழலில் தான், இந்த வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அதிகரித்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை முன்னெடுத்து வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோ (Togo), ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பு அளவை துல்லியமாகக் காட்டும் 'ஈக்வல் எர்த்' உலக வரைபடத்தை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை வைத்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு ஐநா பொதுச்சபையில் இன்று நடைபெறவுள்ளது. டோகோவின் இந்த முயற்சிக்கு ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 54 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்துப் பேசியுள்ள டோகோவின் வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி (Robert Dussey), ”இந்த விவாதம் ஒரு அரசியல் விவாதம் அல்ல, மாறாக ஒரு அறிவியல் விவாதம். ஏனெனில், அறிவியல் சான்றுகள் உள்ளன. எனவே, நாம் அனைவரும் எதார்த்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, 1569-ஆம் ஆண்டு பிளெமிஷ் வரைபட நிபுணர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் (Gerardus Mercator) உருவாக்கிய வரைபடம், கடல் வழிச் செல்லும் மாலுமிகளின் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் ஏற்படும் அளவு திரிபு காரணமாக, இன்றும் உலக நாடுகளைப் பற்றிய நமது பார்வையில் தாக்கம் ஏற்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கு ஓர் உதாரணம்... மெர்கேட்டர் வரைபடத்தில் ஆப்பிரிக்காவும் கிரீன்லாந்தும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் ஆப்பிரிக்கா, கிரீன்லாந்தைவிட சுமார் 14 மடங்கு பெரியது.
மேலும், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதியையே ஆப்பிரிக்க கண்டத்திற்குள் அடக்க முடியும் என இந்தப் பிரச்சாரத்தின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், இந்தப் பிரச்னை வெறும் வரைபடம் தொடர்பான தொழில்நுட்ப விவகாரம் மட்டுமல்ல... வரலாற்றில் மேற்கத்திய நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த பார்வையை மாற்றுவதற்கான முயற்சி என்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
‘கார்ட்டோகிராபிக் காலனித்துவம்’ (Cartographic colonialis) அதாவது 'வரைபட ரீதியிலான காலனித்துவம்'என அழைக்கப்படும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகத்தை அதன் உண்மையான நிலப்பரப்பு விகிதத்தில் காட்ட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்தச்சூழலில் தான், ஐநாவில் முன்மொழியப்பட்டுள்ள இத்தீர்மானம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது கட்டாயப்படுத்தக்கூடிய சட்டம் அல்ல. இருப்பினும், அது நிறைவேற்றப்பட்டால் பள்ளிப் பாடத்திட்டங்கள் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரை உலக வரைபடங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உருவாகலாம்.

