100 ஆண்டுகளில் இல்லாத மழை.. தத்தளிக்கும் கனடா.. தொடரும் மீட்புப் பணி!!
கனடாவில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிற்பகல் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோ பகுதிகளில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் தாக்கியது. சில மணி நேரங்களிலேயே இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அந்நாட்டில், ஆகஸ்ட் மாதத்தின் சராசரி மழையளவே சுமார் 78 மில்லி மீட்டர் என்ற நிலையில், டொராண்டோவில் ஒரே இரவில் 150 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. கனமழையுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றும் வீசியதால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. டான் நதி கரைபுரண்டு ஓடியதால், டான் வேலி பார்க்வேயின் சில பகுதிகள் மூடப்பட்டன.
மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையும், டொராண்டோ தீவுக்கான படகு சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. குறிப்பாக டொராண்டோவில் உள்ள புகழ்பெற்ற ரோஜர்ஸ் ஸ்டேடியம் பலத்த சேதமடைந்தது. மைதானம் முழுவதும் இடிபாடுகள் சிதறிக் கிடப்பதாக கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் தான், இந்தப் புயலை டொராண்டோ நகர நகர மேலாளர் பால் ஜான்சன், நகரின் வரையறையின்படி “100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் புயல்” என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது, அங்கு புயல் ஓய்ந்ததைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளநீரை அகற்றுவதுடன், விழுந்த மரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பெரும்பாலான நகர சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், சில சாலைகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
