புதினுக்குக் குறி.. உக்ரைனின் 40 நாள் தீவிர தாக்குதல்.. அதிர்ச்சியில் ரஷ்யா!
ஜெலென்ஸ்கி அறிவித்த 40 நாள் தீவிர தாக்குதல் புதிய திருப்புமுனையாகியுள்ளது. பிளமிங்கோ ஏவுகணைகள், கில்லர் ட்ரோன்கள் மூலம் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கிரிமியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டதால், ரஷ்யாவின் எரிசக்தி துறை, எண்ணெய் சுத்திகரிப்பு திறன், தளவாட விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ராணுவத்துக்கு எரிபொருள், ஆயுதங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
செய்தியாளர் ; m. மீரா
2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தப் போரில் தற்போது பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்த அல்லது ரஷ்ய அதிபரை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி 40 நாள் தீவிர தாக்குதல் நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளார் .
இதன் காரணமாக ரஷ்யாவின் முக்கியப் பகுதிகள் நிலைகுலைந்துள்ளன. உக்ரைனின் இந்த அதிரடி உத்தியானது, எல்லையில் நடக்கும் போரை ரஷ்யாவின் முக்கிய நகரங்களுக்குள் கொண்டு சென்றுள்ளது.
உக்ரைன் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய உத்தியின்கீழ், உக்ரைன் தனது அதிநவீன மற்றும் நீண்டதூரம் பாயும் பிளமிங்கோ (Flamingo) ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான கில்லர் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரிமியா உட்பட ரஷ்யாவின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. மேலும், கடுமையான பாதுகாப்புகள் கொண்ட புதினின் சொகுசு அரண்மனை இருக்கும் வால்டாய் (Valdai) பகுதிக்கு அருகில்கூட உக்ரைன் ட்ரோன்கள் தாக்கியதால், அவரின் வீட்டை மாஸ்கோவிற்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பல எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களால் ரஷ்யா முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியது. உக்ரைனின் இந்த தாக்குதல்களின் முதன்மை இலக்கு ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பான எரிசக்தித் துறையை முடக்குவதுதான் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் மட்டும் ரஷ்யாவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான நோர்சி (Norsi) மற்றும் கிரிமியாவில் உள்ள முக்கிய எரிபொருள் கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதால் கடுமையாக சேதமடைந்தது. இதனால் ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் சுமார் 38 சதவீதம் முடங்கியுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்க முழுத் தடையும் விதிக்கப்பட்டு அவசர நிலையும் பிறப்பிக்கப்படுள்ளது .
பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறை, தளவாட முடக்கம் ஆகிய மூன்று காரணங்களால் ரஷ்ய ராணுவத்திற்கு போர்க்களத்தில் ஆயுதங்களும் எரிபொருளும் சென்றடைவது முழுமையாக தடைபட்டுள்ளது. அமெரிக்கா-நேட்டோ (NATO)வின் புதிய ராணுவ ஆதரவு உக்ரைனுக்கு வலுசேர்த்துள்ள நிலையில், ரஷ்யாவின் இழப்புகளை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாக மாறி வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

