போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த புதின்!
உக்ரைன்-ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளாக நீடிக்க, ரஷ்யா மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. நேட்டோவில் இணைவதை கைவிட வேண்டும், டான்பாஸ் பிராந்தியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும், மேற்கத்திய படைகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பனவாகும். இதை உக்ரைன் நிராகரிக்க, ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ட்ரம்ப், போரை நிறுத்த முயற்சிக்கின்றார்.
3 ஆண்டுகளாகத் தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர்
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், டொனால்ட் ட்ரம்பும் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். ”ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில், எதுவும் சொல்ல முடியாது” என்று அமெரிக்க அதிபர் கூறினார். அதேவேளையில், போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியிருந்தார்.
ரஷ்யா விதித்த மூன்று நிபந்தனைகள்
இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா தரப்பில் வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உக்ரைன் நிராகரித்தது. ரஷ்யா கைப்பற்றிய இடங்களைவிட்டு தரமுடியாது. நேட்டோவில் இணைவதைத் தடுக்க முடியாது போன்ற உக்ரைனின் பதில்கள் ரஷ்யாவை அதிருப்தியடையச் செய்தது. இதற்கு எதிர்வினையாக உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை ரஷ்யா உக்கிரமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்தான், நேட்டோவில் இணையும் முடிவை கைவிட வேண்டும், டான்பாஸ் பிராந்தியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும், உக்ரைனில் இருக்கும் மேற்கத்திய படைகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற போர் நிறுத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளை ரஷ்யா விதித்துள்ளது. ஏற்கெனவே, மாஸ்கோவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் ரஷ்யாவின் யோசனையை உக்ரைன் நிராகரித்த நிலையில், புடினின் நிபந்தனைகளை ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தொடரும் போர்
இன்னொரு புறம், உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைன் படைகளின் கூற்றுப்படி, மாஸ்கோ ஒரே இரவில் 574 ட்ரோன்கள் மற்றும் 40 கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது, இதுவரை இல்லாத மிகப்பெரிய குண்டுவீச்சுத் தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இதில், மேற்கு உக்ரைனில் உள்ள ஐந்து நகரங்களும், சபோரிஷியாநகரமும் சிதைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஹங்கேரிய எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகச்சேவோ நகரில் நடந்த ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்காவிற்குச் சொந்தமான ஒரு பெரிய மின்னணு உற்பத்தி ஆலையைத் தாக்கியுள்ளது.
இதுகுறித்து உக்ரைனில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையின் தலைவரான ஆண்டி ஹண்டர், "ரஷ்யா உக்ரைனில் உள்ள அமெரிக்க வணிகங்களை தொடர்ந்து அழித்து அவமானப்படுத்துகிறது, அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை குறிவைக்கிறது. ரஷ்யா உக்ரைனை அழிப்பது மட்டுமல்லாமல் - அது அமெரிக்க தலைமை, மதிப்புகள் மற்றும் அமெரிக்க வணிகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, புதினும், ஜெலன்ஸ்கியும் சண்டையிட்டுக்கொண்டு மக்களை கொன்று வருவதாகவும், இது மிகப்பெரிய முட்டாள்தனம்” எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் மோதல் உட்பட உலகில் ஏழு போர்களை நிறுத்தியுள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், உக்ரைன் - ரஷ்யா போரையும் நிறுத்த விரும்புவதாக கூறினார். ஆனால் அது மிகவும் கடினமாக உள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் இது எந்த திசையில் செல்லும் என்பதை பார்த்தபிறகு முடிவெடுப்பேன் என்றும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.