”போர் முடிவுற்றால் பதவியிலிருந்து விலகிவிடுவேன்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
”ரஷ்யாவுடன் போர் முடிவுக்கு வந்தபிறகு தாம் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன்” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ”ரஷ்யாவுடன் போர் முடிவுக்கு வந்தபிறகு தாம் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன்” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே முதல் இலக்கு. போர் முடிவுக்கு வந்தபிறகு நான் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன். அதன்பிறகு மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன். ஏனெனில், தேர்தல் என்பது என்னுடைய இலக்கு அல்ல. மக்களுடன் துணை நிற்பதே என்னுடைய குறிக்கோள். போர்க் காலத்தில் உக்ரைன் மக்களுக்குத் துணையாக நிற்க விரும்புகிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனில் தேர்தலை நடத்தக் கோருவேன். அப்போது தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார். 2024 பிப்ரவரியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவுடனான போர் நீடிப்பதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.