உக்ரைன் | எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்.. குளிரில் வாடும் பொதுமக்கள் ரயில்களில் தஞ்சம்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளின் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி அழித்து வருகிறது. இதன்காரணமாக, கீவ் நகரமே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியிருக்கிறது. மேலும், உக்ரைனில் இது கடும்பனிப்பொழிவுக் காலம் என்பதால், மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில், மின்சாரமும் தடைபட்டுள்ளதால் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அறை வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய ஹீட்டர்களையும் அம்மக்களால் பயன்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, கீவ் பிராந்தியத்தில் உள்ள புரோவரி (Brovary) நகரில், பழைய ரயில் பெட்டிகள் வெப்பமூட்டும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் வெப்ப வசதி இல்லாத வீடுகளிலிருந்து வரும் மக்கள், இங்கு தங்களை வெப்பப்படுத்திக்கொள்வதோடு மின்சாதனங்களையும் சார்ஜ் செய்துகொள்கின்றனர். வகுப்பறைகளில் கடும் குளிர் நிலவுவதால், மாணவர்களும் இந்த ரயில் பெட்டிகளுக்கு வருகிறார்கள். தங்கள் வீடுகளில் வெப்பநிலை 5 டிகிரிக்கும் கீழே குறைந்துவிட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, குளிர் வெப்பநிலை தொடர்ந்தால் நிலைமைகள் மோசமடையக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். முன்னதாக, டிசம்பர் மாத இறுதியில் இருந்து மட்டும் 1,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் உறைபனி மற்றும் தாழ்வெப்பநிலை காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

