“சாமானியர்கள் அதிகாரம் பெற சிறந்த முன்மாதிரி”., இந்திய இட ஒதுக்கீடு முறைக்கு ஆக்ஸ்ஃபாம் பாராட்டு!
உலகளவில் சமத்துவமின்மை குறித்து ஆக்ஸ்பாம் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் இடஒதுக்கீடு முறையை பாராட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார மன்றத்தின் மாநாடு இன்று சுவிட்சர்லாந்தில் தொடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல்கள், சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரைன் உள்ளிட்ட 64 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து அஷ்வினி வைஷ்ணவ், சிவராஜ் சிங் சவுகான், பிரஹலாத் ஜோஷி, ராம்மோகன் நாயுடு ஆகிய 4 மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், ஆக்ஸ்பாம் சர்வதேச அமைப்பு சமத்துவமின்மை குறித்த தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகளவில் செல்வந்தர்கள் சாமானியர்களை விட 4,000 மடங்கு அதிக அரசியல் செல்வாக்கு பெற்றுள்ள சூழலில், இந்தியாவின் இடஒதுக்கீடு முறை விளிம்புநிலை மக்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை அடையப் பாலமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு, சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்கள் சட்டம் இயற்றும் அவைகளில் பிரதிநிதித்துவம் பெற உதவுகிறது. மேலும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் இந்தியாவின் சமீபத்திய முடிவையும் ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளது.

