3 நாட்களுக்கு ஒருமுறை தாக்குதல்.. 51% எண்ணெய் முடக்கம்.. ரஷ்யாவைத் திணறடித்த உக்ரைன்!
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், அந்நாட்டின் 51% எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ, யாரோஸ்லாவ்ல், உஸ்ட்-லுகா, பெர்ம், சரடோவ், சிஸ்ரான் உள்ளிட்ட நகரங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது சமீபத்தில் உக்ரைன் நீண்டதூர தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களின் காரணமாக ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் 51% தற்போது செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைன் உளவுத்துறை, ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பல்வேறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், சில இடங்களில் பெட்ரோல் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யாவில் உள்ள 32 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் சில, போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 15 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீப மாதங்களில் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாகவும் IEA தெரிவித்துள்ளது.
மேலும், எரிபொருளில் உள்ள கழிவுகளை நீக்கும் முக்கியமான உபகரணங்களும் தற்போது தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இவற்றை சரிசெய்ய பல மாதங்கள் ஆகும் என்பதால், ரஷ்யாவின் டீசல் உற்பத்தி சுமார் 30% குறைந்துள்ளதாக IEA கூறியுள்ளது.
இதனால் சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு வாகன ஓட்டிகள் 40 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.

