16,000 அடி கீழே சரிந்த விமானம்.. சுட்டு வீழ்த்தத் தயாரான இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் மாறிய பாதை!
ஃபிளைதுபாய் விமானத்தில், துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மானி நடந்துகொண்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாள்தோறும் அதுதொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஃப்ளைதுபாய் விமானத்தைக் கடத்தித் தாக்குதல் நடத்த முயன்றபோது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அதைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ராணுவம் தயாராக இருந்ததாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயிலிருந்து கடந்த செப்டம்பர் 30 அன்று, டெல் அவிவ் நோக்கி ஃபிளைதுபாய் விமானம் சென்று கொண்டிருந்தது. இதில் ஓமன் நாட்டுத் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றார். இதனால், அந்த விமானம் 30 வினாடிகளுக்கும் சற்று அதிகமான நேரத்தில் 16,000 அடி கீழே சரிந்தது. எனினும் காயத்துடன் போராடிய விமானி ஸ்மித் மச்சார், சாமர்த்தியமாக விமானம் கடத்தப்பட்டதற்கான சர்வதேச 'Squawk 7500' அவசர எச்சரிக்கை குறியீட்டை அனுப்பினார். மேலும், காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து பயணிகள் மற்றும் ஓய்வில் இருந்த விமானிகள் உதவியுடன் அந்த தாக்குதல் சம்பவத்தை முறியடித்தார்.
இதற்கிடையே, கடத்தல் எச்சரிக்கை கிடைத்ததும் அது ஒரு விமானக் கடத்தலாகவோ அல்லது நாட்டைக் குறிவைத்த தாக்குதலாகவோ இருக்கலாம் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு எழுந்தது. இதையடுத்து, இஸ்ரேலிய விமானப்படை உடனடியாகத் தனது போர் விமானங்களை வான்வெளிக்கு அனுப்பியது. ரேடியோ தொடர்புக்கு விமானி பதிலளிக்காத பட்சத்திலும், விமானம் தொடர்ந்து டெல் அவீவ் நகரை நோக்கி வந்திருந்தாலும், பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கும் அவசரகால விதிகளின்படி அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேலிய ராணுவக் குழு மற்றும் பிரதமர் அலுவலகம் தயாராக இருந்ததாக சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த விமானம் சவூதி அரேபியாவின் விமானத் தளத்தை நோக்கித் திரும்பியதால் இஸ்ரேலிய போர் விமானங்கள் திரும்ப அழைக்கப்பட்டன. பின்னர் விமானம் சவூதியின் தபூக் (Tabuk) விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. அதேபோல், சவூதி அரேபியாவும் போர் விமானங்களை விரைந்து அனுப்பியதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது

