இப்படியும் நடக்குமோ!! வீட்டு வாடகையை உயர்த்திய சர்ச்சையில் பதவியை ராஜினாமா செய்த பிரிட்டன் அமைச்சர்!
பிரிட்டனின் வீடற்றோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், ருஷனாரா அலி. இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு கிழக்கு லண்டனில் உள்ள தனது நான்கு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் இருந்து நான்கு குத்தகைதாரர்களை வெளியேற்றியதாக பிரிட்டிஷ் செய்தி ஊடகமான ’தி ஐ பேப்பர்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மாத வாடகை 3,300 பிரிட்டிஷ் பவுண்டுகள் (சுமார் 4,433 டாலர்) இருந்த இந்தச் சொத்து, வாடகைக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டு, வாங்குபவர் யாரும் கிடைக்காததால், சில வாரங்களுக்குப் பிறகு 4,000 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு (5,374 டாலர்) வாடகைக்கு விடப்பட்டது என அது செய்தி வெளியிட்டிருந்தது.
வாடகை ஒப்பந்தங்களின் முடிவு, பிரிட்டனில் வீடற்ற தன்மைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் ஸ்டார்மரின் அரசாங்கம் தற்போது ஒரு வாடகைதாரர் உரிமைகள் மசோதாவைத் தயாரித்து வருகிறது. இது, வீட்டு உரிமையாளர்களால் குறுகியகால தவறு இல்லாத வெளியேற்றங்களை முடிவுக்குக் கொண்டுவரும் மற்றும் வெளியேற்றத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் அதிக வாடகைக்கு ஒரு சொத்தை மீண்டும் பட்டியலிடுவதைத் தடை செய்யும். அந்த வகையில், அமைச்சர் ருஷனாராவின் இந்த விவகாரம் விவாதங்களை எழுப்பியது. இதையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எழுதிய கடிதத்தில், ’’தான் பதவியில் தொடர்ந்தால், அரசின் லட்சியப் பணிகளுக்கு ஒரு குறுக்கீடாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், ’தான் எல்லா நேரங்களிலும் அனைத்து சட்டத் நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், தனது பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் அவருடைய இந்த ராஜினாமா ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்கட்சி மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு கருத்துக்கணிப்புகளில் அவரது கட்சி நைகல் ஃபராஜின் வலதுசாரி ஜனரஞ்சக சீர்திருத்த யுகே கட்சியைவிட பின்தங்கியுள்ளது. ஜூன் மாதம் யூகோவ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், ரிஃபார்ம் யுகே கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 271 இடங்களை வெல்லும் என்றும், ஆளும் தொழிலாளர் கட்சி 178 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.