’உங்கள் நாட்டின் அழகான பெண்ணும்.. பணமும் வேண்டும்’ துருக்கியை மிரட்டிய ராணுவ தளபதி!
ஆப்பிரிக்க சிறுநாடு உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி, சோமாலியாவில் 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் தங்கள் ராணுவத்தால் பாதுகாக்கப்படும் துறைமுக, விமான நிலைய ஒப்பந்தங்களில் துருக்கி மட்டும் லாபம் பார்க்கிறது என குற்றம்சாட்டுகிறார். இதற்காக 1 பில்லியன் டாலர் இழப்பீடு மற்றும் துருக்கியின் அழகான பெண்ணை மணமகளாக தர வேண்டும் என எக்ஸில் சர்ச்சைக்குரிய கோரிக்கை வைத்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடுகளில் ஒன்று உகாண்டா. இந்த நாட்டின் அதிபராக யோவேரி (Yoweri Museveni) என்பவர் செயல்பட்டு வருகிறார். சர்வாதிகாரியான இவர் மகனான முஹூசி (Muhoozi Kainerugaba) என்பவரே தற்போது உகாண்டாவின் ராணுவத் தளபதியாக உள்ளார்.
உகண்டாவின் ராணுவம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சோமாலியாவில் தங்கி, அங்குள்ள பயங்கரவாத அமைப்பான 'அல்-ஷபாப்' (Al-Shabaab) உடன் போரிட்டு வருகிறது. ஆனால், சோமாலியாவின் தலைநகரில் உள்ள முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தங்களைத் துருக்கி நாட்டு நிறுவனங்கள் பெற்றுள்ளன.
இதன் மூலம் துருக்கி பெரும் லாபம் ஈட்டுவதாகவும், உகாண்டா வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் பாதுகாக்கும் இடத்தில் துருக்கி மட்டும் பணம் சம்பாதிப்பது நியாயமற்றது என உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், முஹூசி தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில், சோமாலியாவில் உகாண்டா ராணுவத்தின் செயலுக்காக துருக்கி உகாண்டாவிற்கு 1 பில்லியன் டாலர் பணத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், துருக்கியின் மிக அழகான பெண்ணை தனக்கு மனைவியாகத் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது விளையாட்டு கிடையாது, நான் சீரியஸாகப் பேசுகிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், உகாண்டாவில் உள்ள துருக்கி தூதரகம் உடனடியாக மூடப்படும் என்றும், துருக்கியுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளும் துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த முஹூசி இதற்கு முன்னர் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியைத் திருமணம் செய்துகொள்ள 100 பசுக்களைத் தருவதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

