ஓட்டும்போதே தூங்கி தூங்கி விழுந்த டிரைவர்.. பெண் பயணி எடுத்த அதிரடி முடிவு: வைரலான வீடியோ
வாகன ஓட்டி தூங்கி தூங்கி விழுந்ததால் வேறு வழியில்லாமல் தானே வாகனத்தை ஓட்ட முன் வந்த பயணியின் செயல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) ( Tejaswini Divya Naik ). இவர் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபர் நிறுவனத்தில் வாகனத்தை புக் செய்துள்ளார். இதனையடுத்து தேஜஸ்வினியை ஏற்றிக்கொண்ட சென்ற டிரைவர் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த தேஜஸ்வினி போனில் கவனம் செலுத்துவதை தவிர்த்து வாகனத்தை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து டிரைவர் போனை கீழே வைத்து விட்டு வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்தி இருக்கிறார்.
பின்னர், சிறிது நேரம் வாகனம் ஓட்டிய அவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே தூங்கி தூங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த தேஜஸ்வினி, அவரை எழுப்பி வாகனத்தை ஒழுங்காக ஓட்டுமாறு கண்டித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் வாகனத்தை ஒழுங்காக ஓட்டிய அவர் மீண்டும் தூங்கி விழுந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாகனத்தை மற்றொரு காரின் மீது கொண்டும் இடித்தும் விட்டார். இதனால் பொறுமை இழந்த தேஜஸ்வினி அவரிடம் இருந்து காரை வாங்கி ஓட்டியுள்ளார். ஆனால், அவரிடம் இருந்து காரை வாங்கும் முன் தனக்கு முதுகு வலி இருப்பதால் தன்னால் நீண்ட தூரம் ஓட்ட முடியாது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, வாகன ஓட்டி காரை அவரிடம் கொடுத்து அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து தூங்கியுள்ளார். அதன் பின்னர் தேஜஸ்வினி தான் சேரும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வாகனத்தை வாங்கி ஓட்டியுள்ளார். இதனையடுத்து டிரைவர் தூங்குவதை வீடியோ எடுத்த அவர் இந்த சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இது குறித்து தேஜஸ்வினி கூறும் போது, நான் அவரிடம் காரை வாங்கி ஓட்டிய போது அந்த டிரைவர் போனில் பேசி வந்ததாகவும் அதில் அவரது டிரைவிங் திறமையை பற்றி பெருமையாக பேசி வந்ததாகவும் கூறியுள்ளார்.