அரபு நாடுகளில் முதன்முறை.. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை.. யாருக்குத் தெரியுமா? UAE அதிரடி!
15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரும் தங்களுக்கு எனத் தனியாக சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கவோ, பயன்படுத்தவோ ஐக்கிய அரபு அமீரகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதற்கான சட்டத்தை அமல்படுத்தியது. இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், கிரீஸ், போலந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இதற்கான மசோதாவை கொண்டுவருவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், அரபு நாடுகளில் முதன்முறையாக, ஐக்கிய அரபு அமீரகம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான வயது வரம்பை 15 ஆக நிர்ணயித்துள்ளது. குழந்தைகள் மீது இணையத்தளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் களைய முயன்றுவரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 என நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்திய முதல் அரபு நாடு இதுவாகும். அந்நாட்டின் தீர்மானத்தின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்குவது, பயன்படுத்துவது அல்லது இயக்குவது தடை செய்யப்படும்.
இந்தத் தடையின் காரணமாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் போன்ற எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் 15 வயதுக்குக் குறைவானவர்கள் கணக்கு வைக்கக் கூடாது. அவர்கள் பதிவுகளைப் போடுவதோ, கருத்து தெரிவிப்பதோ, மற்றவர்களுடன் பகிர்வதோ அல்லது பொதுவான குழுக்களில் இணைவதோ முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், 15 மற்றும் 16 வயதுடையவர்கள் அவர்களின் திரை நேரம், பெற்றோர் கண்காணிப்பு மற்றும் தேவையற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் போன்ற கடுமையான நிபந்தனைகளின் கீழேயே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் அனைத்து சமூக ஊடகத் தளங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் எனவும், இந்த விதியை முழுமையாக நடைமுறைப்படுத்த 12 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் வெறும் பிறந்த தேதியை மட்டும் உள்ளீட்டுக் கணக்குத் தொடங்க முடியாது எனவும் டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது AI தொழில்நுட்பம் மூலம் துல்லியமாக வயது சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் சமூகத் தளங்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் உருவாக்கப்பட்ட கணக்குகளை முடக்க வேண்டும், வயது சரிபார்ப்பு அமைப்புகளைப் பயனர்கள் தவிர்ப்பதைத் தடுக்க வேண்டும், மேலும் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களுக்காகவோ அல்லது நடத்தை விவரங்களைச் சேகரிப்பதற்காகவோ குழந்தைகளின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு 12 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பொருத்தமற்ற உள்ளடக்கங்களுக்கு ஆளாகுதல், பாதுகாப்பற்ற இணையவழித் தொடர்புகள், சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட தரவுகள் சேகரிப்பு ஆகியவை தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

