ஏமனில் புதிய திருப்பம்.. சவூதிக்கு எதிராக அமீரகம்? வளைகுடாவில் வெடிக்கும் புதிய மோதல்!
ஏமனில் உள்நாட்டுப் போர் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஈரான் ஆதரவு ஏமன் ஹவுதிப் படைகளுக்கும், ஏமன் அரசு ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்தது. இடையில் 2022ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம், உலகின் வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் வழக்கமாக கடந்து செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள கப்பல்களைக் கண்காணித்து வருகின்றனர்.
இதனால், சவூதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் ஆதரவு ஹவுதிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால், சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே மேலும் விரிசல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனில், ஹவுதிகள் நடத்தும் தாக்குதலில், ஐக்கிய அரபு அமீரகம் அவர்களுக்கு ரகசியமாக உளவுத் தகவல்களையும் இலக்கு நிர்ணய உதவிகளையும் வழங்கி வருவதாக 'டிராப் சைட்' என்ற புலனாய்வு செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளின் நிலைகள் மற்றும் நகர்வுகள் குறித்த முக்கிய உளவு மற்றும் இலக்குத் தகவல்களை, சனாவிலுள்ள ஹவுதி அதிகாரிகளுக்கு ரகசியப் பாதைகள் வழியாக அமீரகம் பகிர்வதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு ஹவுதிகளுக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் அமீரகம் இணைந்து போரிட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே உருவான கடுமையான பிராந்திய ஆதிக்கப் போட்டியின் காரணமாக இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், சவூதி அரேபியா ஏமனின் அதிகாரப்பூர்வ அரசை ஆதரிக்கும் வேளையில், அமீரகம் ஏமனின் தெற்குப் பிரிவினைவாதக் குழுவுக்கு ஆதரவளித்து வருகிறது. தவிர, கொள்கை அளவில் ஹவுதிகளும் அமீரகமும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், ஏமனில் சவூதி ஆதரவுப் படைகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, தெற்குப் பகுதிகள் மற்றும் முக்கியத் துறைமுகங்களில் தனது பிடியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் இத்தகைய உத்திகளை அமீரகம் கையாள்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனினும், இந்த விவகாரம் ஏமன் உள்நாட்டுப் போரை மேலும் சிக்கலாக்கியுள்ளதோடு, வளைகுடா நாடுகளின் இரண்டு முக்கிய கூட்டாளிகள் மோதிக் கொள்வதும் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

