பிலிப்பைன்ஸ், தைவானைப் புரட்டிப் போட்ட ’ராகசா’ புயல்.. ஹாங்காங்கை நோக்கி நகர்வு!
ஹாங்காங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள சீனாவில் இன்று, ராகசா புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைப் புரட்டிப்போட்ட ராகசா புயல், தற்போது ஹாங்காங்கை நெருங்குகிறது. ஹாங்காங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள சீனாவில் இன்று, ராகசா புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டின் சக்தி வாய்ந்த புயலாக பார்க்கப்படும் ராகசா, தான் பயணிக்கும் இடங்களை எல்லாம் கபளீகரம் செய்து வருகிறது.
அந்த வகையில், ஹாங்காங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள சீனாவில் இன்று நண்பகல் முதல் பிற்பகல் வரை குவாங்டாங்கின் கடற்கரையில் ஜுஹாய் மற்றும் ஜான்ஜியாங் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஹாங்காங் கடற்கரையில் இன்று அலைகள் அதிகமாக எழும்பும் என அந்நாட்டு ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹாங்காங்கில் உள்ள கண்காணிப்பு மையம் புயல் எச்சரிக்கை சமிக்ஞை எண் 8ஐ வெளியிட்டுள்ளது. இது நகரத்தின் வானிலை எச்சரிக்கை அமைப்பில் மூன்றாவது நிலை என அறியப்படுகிறது. புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தப் புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்பட பல்வேறு பகுதிகளிலும் அதீத மழை கொட்டித் தீர்த்ததால், அந்த இடங்கள் தீவு போன்று காட்சியளிக்கின்றன. விளைநிலங்கள், குடியிருப்புகள், சாலைகள் என அனைத்தையும் மழைநீர் ஆக்கிரமித்திருப்பதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் கனமழையோடு நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. சாலை முழுவதிலும் சேறு சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள ககயான் மாகாணத்தில் (cagayan) ராகசா புயல் தனது கோர முகத்தை காட்டியுள்ளது.
சூறாவளி காற்றில் வீட்டின் மேற்கூரைகள் காணாமல் போயிருக்க, மரங்களும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. தைவானின் மலைப்பாங்கான பகுதிகளும் ராகசா புயல் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பேரியர் ஏரி உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. புயல் காரணமாக தைவானில் உள்ள hualienஇல் இருவர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 7,600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.