இஸ்ரேலுக்குள் நாங்கள் நுழைவோம்.. துருக்கி பகிரங்க எச்சரிக்கை! அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்!
ஹமாஸ் தாக்குதலுக்கு பின் காசா, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய நடவடிக்கைகளை துருக்கி கடுமையாக கண்டித்துள்ளது. பொதுக்கூட்டத்தில் எர்டோகன், லிபியா, நாகோர்னோ-கராபாக் போல் இஸ்ரேலுக்குள் நுழைவோம் என எச்சரித்தார். தாம் வலிமையாக இருந்தால் இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு இவ்வாறு நடக்காது என்றும், சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை இஸ்ரேல் திட்டமிட்டு தகர்க்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர் - பிரவிண் ஜோஸ்வா
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காஸாவின் மீது படையெடுத்தது. அப்போது இஸ்ரேலுக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. அந்த வகையில் துருக்கியும் இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
அதோடு இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலையும் கடுமையாக துருக்கி விமர்சித்தது. இந்த நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாங்கள் எப்படி லிபியாவுக்குள் நுழைந்தோமோ, எப்படி நாகோர்னோ-கராபாக் பகுதிக்குள் நுழைந்தோமோ, அதேபோல் இஸ்ரேலுக்குள்ளும் நுழைவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நாம் வலிமையாக இருந்தால், இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக இதுபோன்ற முட்டாள்தனமான காரியங்களைச் செய்திருக்க முடியாது என்றும், சர்வதேச அளவில் போர் நிறுத்தத்திற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் திட்டமிட்டுச் சீர்குலைத்து வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
அதோடு, அக்ஸா மசூதியை மூடுவது, கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பது, லெபனான், சிரியா போன்ற அண்டை நாடுகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் பிராந்தியத்தை ஒரு நெருப்பு வளையத்திற்குள் தள்ளுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
நேட்டோவில் உறுப்பினராக இருக்கும் துருக்கி அந்த பகுதியிலேயே மிகப்பெரிய ராணுவத்தை வைத்துள்ள நாடாக திகழ்ந்து வருகிறது. அப்படி ஒரு நாட்டின் இந்த விமர்சனம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் லிபியா மற்றும் அஜர்பைஜான் உள்நாட்டு விவகாரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக துருக்கி ட்ரோன்களை அனுப்பி வெற்றிகளைப் பெற்றிருப்பதால், அதே பாணியை இஸ்ரேல் விவகாரத்திலும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

