13000 வீரர்கள்.. 18 போர் விமானங்களை அனுப்பிய பாகிஸ்தான்! ஈரானுக்கு எதிராக நிற்கிறதா..?
கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சுமார் 13,000 வீரர்கள் மற்றும் 10 முதல் 18 ஜெட் விமானங்களைக் கொண்ட பாகிஸ்தான் இராணுவப் படைப்பிரிவு சவூதி அரேபியாவை ஏப்ரல் 11 அன்று வந்தடைந்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக சுமார் 13 ஆயிரம் ராணுவ வீரர்களையும் 18 போர் விமானங்களையும் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. சவுதி அரேபியாவிலும் சில இடங்களில் ஈரான் தாக்கியுள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்நகர்வு கவனம் பெறுகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் மற்ற நாடு தாக்கப்படும்போது படைகளை அனுப்பி உதவவேண்டும் என கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பாகிஸ்தான் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இது முற்றிலும் சவுதி அரேபியாவின் தற்காப்புக்கான நடவடிக்கை மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் படைகளை அதிகளவில் அனுப்பியுள்ளது மேற்காசிய போரில் புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் அமெரிக்க ராணுவத்தளங்களையும் எண்ணெய் வயல்களையும் ஈரான் தாக்கி வரும் நிலையில் அங்கு பாகிஸ்தான் போர் விமானங்கள் சென்றுள்ளன. சவுதி அரேபியா தங்களுக்கு எதிரி நாடாக உள்ள நிலையில் அதற்கு பாகிஸ்தான் உதவுவது ஈரானின் கடும் அதிருப்தியை சம்பாதிக்கும் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒரு அணுஆயுத நாடு போர்க்கள பகுதிக்கு செல்வது கவனிக்கவேண்டிய ஒன்று என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரம் சவுதி அரேபியா தனது பாதுகாப்பு தேவைகளுக்கு அமெரிக்காவை தொடர்ந்து சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதே நேரம் சவுதி அரேபியாவிடம் இருந்து பொருளாதார ரீதியாக உதவிகளை தொடர்ந்து பெறவே இது போன்ற உதவியை பாகிஸ்தான் துணிந்து செய்வதாகவும் தகவல்கள் உள்ளன.

