இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். காசா எல்லைப் பகுதியை குறிவைத்து ராக்கெட்கள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டு தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 7 ஆம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்காக, இதுவரை 37 ஆயிரத்து 350 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காசாவில் கடந்த 18 நாட்களாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 12 ஆயிரம் டன் வெடிமருந்துகள் தங்கள் பகுதியில் விழுந்துள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளது. காசா பகுதியில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் 400 முறை வான்வழித்தாக்குதல்கள் நடத்தியதாகவும் இதில் குறைந்தபட்சம் 700 பேர் இறந்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இதுவரை 6 ஆயிரத்து 55 பேர் கொல்லப்பட்டதாகவும் 15 ஆயிரத்து 143 பேர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களை சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகள் திறந்திருந்தாலும் சிகிச்சை அளிக்க எந்த வசதிகளும் இல்லை எனவும் காசாவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் - காசா இடையிலான போர் நிறுத்தத்திற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என ஐநா பாதுகாப்பு சபையில் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தின. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்திருந்ததையும் அமெரிக்கா தடுத்திருந்தது.
இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இஸ்ரேல் ஒரு நாட்டைப் போல் அல்லாமல் ஒரு பயங்கரவாத அமைப்பாக செயல்படுகிறது. இது இஸ்ரேலின் தற்காப்பு செயல்பாடு இல்லை; மாறாக மனிதாபிமானத்திற்கு எதிராக குற்றம் புரிகிறது
ஒட்டுமொத்த உலகமும் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலஸ்தீன ராணுவ குழுவான ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல. அது ஒரு விடுதலைக் குழு. தங்களுடைய நிலத்தை பாதுகாக்க போராட்டத்தை நடத்துகிறது” என தெரிவித்துள்ளார்.