“ட்ரம்புக்கு மனநல பாதிப்பா?”.. ஒற்றைப் பதிவால் கடும் கோபத்தில் அண்டை நாடுகள்!!
கனடா, மெக்சிகோ, க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை அமெரிக்காவோடு இணைத்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் பதிவு கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ட்ரம்ப் இதுபோன்று நூற்றுக்கணக்கான பதிவுகளைப் போட்டிருக்கும் நிலையில், ட்ரம்பின் மன ஆரோக்கியம் குறித்து பலரும் கவலைப்பட ஆரம்பித்திருக்கின்றனர். விவரம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...
தங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட நாடுகள், பகுதிகளுக்கு படையெடுத்துச் செல்லும் மன்னர்களின் கதையைக் கேட்டிருப்போம். ஆனால், அதிபராக பதவியேற்ற நாள் தொடங்கி, அமெரிக்க மக்களால் ‘மன்னர்’ என விமர்சிக்கப்பட்டு வரும் அதிபர் டொனால்ட், டிஜிட்டல் போரை தூண்டிவிட்டிருக்கிறார். ட்ரம்பின் செயல் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் கோபமடையச் செய்திருக்கிறது. கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் சுமார் 100 பதிவுகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
ஏஐயால் உருவாக்கப்பட்ட படங்களை ட்ரம்ப் தொடர்ந்து பதிவிட்டது பலரையும் கவலையடையச் செய்தது. ட்ரம்ப் அந்த பதவிக்கு ஏற்ற நபர் தானா என சிலரும், ட்ரம்புக்கு டைமென்ஷியா அல்லது வேறு எதாவது தீவிரமான மூளை நோய் இருக்கும் என்று கலிபோர்னியா மாகாண செனட்டரும் விமர்சித்து வருகின்றனர். நிலவு அமெரிக்காவுக்குதான் சொந்தம் என்பன போன்ற பதிவுகளும் அதில் அடங்கியிருந்ததால் தான் ட்ரம்பின் மன ஆரோக்கியத்தை பற்றிய விவாதம் உருவாகியிருந்தது.
இந்நிலையில், அந்த பதிவுகளில் மேலும் ஒன்று தற்போது சர்ச்சையாகி வருகிறது. கனடா, மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, கியூபா மற்றும் கரீபியன் தீவுகளின் சில பகுதிகளை அமெரிக்கா என குறிப்பிட்டு அந்நாட்டின் கொடி இந்த நாடுகளின் மீது படர்ந்திருப்பதைப் போல ட்ரம்ப் பதிவிட்டிருக்கிறார். சர்வதேச அளவில் போர் பதற்றம், தீவிரமடைந்து வரக்கூடிய வர்த்தக ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் இப்படியான ஒரு பதிவை போட்டிருப்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் கண்டித்திருக்கின்றன.
ட்ரம்பின் செயல் தொடர்பாக கண்டனத்தை பதிவு செய்வதற்காக அமெரிக்க தூதருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது ஐஸ்லாந்து. எந்தவொரு நாட்டின் காலனி நாடாகவோ அல்லது யாருடைய பாதுகாப்பிலுமோ நாங்கள் இருக்க மாட்டோம் என மெக்சிகோ அதிபர் கிளாடியா காட்டம் தெரிவித்திருக்கிறார். அவ்வப்போது இப்படி பரபரப்புகளை கிளப்பிவிட்டு வாய்பொத்தி அமைதிகாக்கும் ட்ரம்பின் செயல், சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல், சம்பவத்தை கேட்போர் அனைவரையும் கோபமடையச் செய்திருக்கிறது.

