\
1,15,000 in Sri Lanka facing drinking water shortage
El ninoReuters

ஒரு சொட்டு நீர் இல்லை? இலங்கையைப் பந்தாடும் எல்.நினோ.. 1,15,000 மக்கள் வேதனை!

ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்துவரும் எல்.நினோ என்ற காலநிலை மாற்றம், தற்போது இலங்கையைப் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.
Published on

செய்தியாளர் - கார்த்திகேயன்

பிசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அடைவதைத்தான் எல்.நினோ என்று அழைக்கிறோம். இது பொதுவாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தாலும், இந்த ஆண்டு மிகக்கடுமையான அளவை எட்டியிருப்பதாக, வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருசில நாடுகளில் அதிகப்படியான வறட்சியையும், ஒரு சில நாடுகளில் அதிகப்படியான வெள்ளம், புயல் போன்ற சீற்றங்களையும், எல்.நினோ ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

srilanka
srilankaReuters

இந்தியா மாதிரியான நாடுகளில், வறட்சி மற்றும் வெள்ளம் இரண்டுமே மக்களை வாட்டி வதைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த எல்.நினோ காலநிலை மாற்றம், இந்தியாவின் அன்டை நாடான இலங்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, எல்.நினோவின் தாக்கத்தால், கடும் வெப்பநிலை மற்றும் போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால், இலங்கையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வறட்சி தீவிரம் அடைந்திருக்கிறது. வறண்ட காலநிலை தொடர்ந்து வருவதால், இலங்கையில் இதன் தாக்கம் குறித்து, வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை மையத்தின் தரவுகளின்படி, 7 மாவட்டங்களில் எல் நினோ காலநிலை தாக்கத்தால் 1,15,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வெப்பம் மற்றும் மழை பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தில் சவால்கள் ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பாக அனுராதபுரம், மாத்தளை, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்வாழ் உயிரினங்களும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

El nino
El ninoReuters

வடகிழக்குப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில், கடல்நீரும், நன்னீரும் கலந்துவிட்டதால், பொதுமக்களுடன் சேர்ந்த சிறிய மீன் வகைகளும் பாதிப்படைந்திருப்பதாகவும், இயற்கையான நீர்நிலைகள் வற்றி வருவதால் வனவிலங்குகளும் மாற்று குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நெல், தென்னை, வாழை, கொய்யா போன்ற பயிர்களும் தண்ணீர் இன்றி சேதமடைந்துள்ளன. செப்டம்பர் மாத இறுதியில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தற்போதைய சூழ்நிலையிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com