H1B விசாவை நிறுத்தும் மசோதா.. நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்.. அமெரிக்க பெண் எம்.பி. அறிவிப்பு!
ஹெச் 1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.
அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கை ரீதியில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, குடியேற்றத்தை தடுக்கும் வகையில் ஹெச்1பி விசா விவகாரத்திலும் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தினார். அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன. இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. ஆனால், ட்ரம்ப் அறிவித்த இந்த புதிய விதியால், இந்தியர்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், H-1B விசா விண்ணப்பக் கட்டணங்கள் தொடர்பாக அமெரிக்காவிலேயே சில நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக இன்றுவரை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில், ”அமெரிக்கர்களுக்கு சில குறிப்பிட்ட துறைகளில் திறமை பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, அவர்கள் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவர்” எனத் தெரிவித்திருந்தார். இதன்மூலம் ஹெச்1பி விசா விவகாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஹெச் 1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு நிலையில், ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்த சிலர் பேசி வருகின்றனர்.
அந்த வகையில், ஹெச் 1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஹெச்-1பி விசா திட்டத்தை அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன. இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஓரம்கட்டப்படுகிறார்கள். இதனால் ஹெச்-1 பி திட்டத்தை முழுமையாக நிறுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போகிறேன். அமெரிக்கர்கள் உலகின் மிகவும் திறமையான மக்கள். மேலும் எனக்கு அமெரிக்க மக்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் எப்போதும் அமெரிக்கர்களை முதன்மைப்படுத்துவேன்.
எனது மசோதா ஊழல் நிறைந்த ஹெச்-1பி திட்டத்தை நீக்கும். இந்த மசோதா H-1B திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதையும், தொழில்நுட்பம், சுகாதாரம், பொறியியல் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் முன்மொழிகிறது. இந்த மசோதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற மருத்துவ நிபுணர்களுக்கு ஆண்டுக்கு 10,000 விசாக்கள் வழங்குவதற்கு ஒரு சலுகை அளிக்கிறது. ஏனெனில், அது அமெரிக்க மருத்துவர்களை உருவாக்குவதற்கு நேரத்தை வழங்குவதற்காக. பிறகு, ஆண்டுக்கு 10,000 என்ற உச்சவரம்புகூட ஒருகட்டத்தில் படிப்படியாகக் குறைக்கப்படும். மேலும், இந்த மசோதா, குடியுரிமைக்கான பாதையை அகற்றும், விசா வைத்திருப்பவர்கள் அதன் காலம் காலாவதியாகும்போது சொந்த நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்று கிரீன் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், H-1B திட்டத்தின் எதிர்காலம் மற்றும் பரந்த குடியேற்ற சீர்திருத்த முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது விவாதம் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

