காமேனி இறுதிச்சடங்கு | ”ஒரே அடியில் அவர்களை அழிக்க முடியும்” - ஈரான் தலைவர்கள் குறித்து ட்ரம்ப்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலில்,கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டங்களின்படி, இறந்தவர்களின் உடலை உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றபோதிலும், வளைகுடா போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வந்த நிலையில், கமேனியின் இறுதிச் சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த ஜூன் 17 அன்று, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில், மத்தியக் கிழக்கில் தற்போது அமைதி திரும்பியிருக்கிறது.
தொடர்ந்து, நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையேயும் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, 4 மாதங்களுக்கு பிறகு, அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 9 தேதி வரை நடைபெறும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நேற்று டெஹ்ரானில் தொடங்கியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தசூழலில் தான், காமேனியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றிருக்கும் ஈரான் தலைவர்களை ஒரே அடியில் அழிக்க முடியும் எனப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காமேனியின் இறுதி ஊர்வலத்தில் ஈரான் எஞ்சிய ஈரான் தலைவர்கள் இருப்பதாகவும், நாம் நினைத்தால், ஈரானின் மீதமுள்ள தலைமை முழுவதையும் ஒரே தாக்குதலில் அழிக்க முடியும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என அமெரிக்கா விரும்புவதால், அத்தகைய நடவடிக்கையை எடுக்க தயாராக இல்லை என்றும் ட்ரம்ப் கூறியதாக ஆக்சியோஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஒரு செய்தி நிறுவனத்துடனான உரையாடலில், இறுதிச் சடங்கில் சில ஈரானியர்கள் அழுவதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும், மக்கள் அலி காமேனியை வெறுப்பதாகத் தான் நினைத்ததாகவும், ஒருவேளை அது போலிக் கண்ணீராக இருக்கலாம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த ஈரான் தூதரகம், ட்ரம்பி கருத்தைக் குறிப்பிட்டு, உங்களுக்கு நாகரீகமோ, வரலாறோ, மரியாதையோ இல்லாததால் இந்த விஷயங்கள் உங்களுக்கு புரியவில்லை எனத் கடுமையாக விமர்சித்திருந்தது.

