நெதன்யாகுவை நிராகரித்த டிரம்ப்.. அமெரிக்காவுக்கு யாரும் உத்தரவு போட முடியாது!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, துருக்கிக்கு F-35 போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஜெட் இன்ஜின்கள் விற்கக் கூடாது; அது மத்திய கிழக்கின் ராணுவ சமநிலையை சீர்குலைத்து, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று அமெரிக்காவை வலியுறுத்தினார். ஆனால் டிரம்ப், அமெரிக்கா எந்த நாட்டுக்கு என்ன விற்க வேண்டும் என்பதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது, அது தேசிய நலனின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலகின் மிக முன்னேறிய போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானங்கள் மற்றும் அதிநவீன ஜெட் இன்ஜின்களை துருக்கிக்கு விற்கக் கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருந்தார். துருக்கிக்கு F-35 வழங்கப்பட்டால், மத்திய கிழக்கின் ராணுவச் சமநிலை பாதிக்கப்படும். அதோடு, இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் அது நேரடி அச்சுறுத்தலாக மாறும் என்பதால் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்திருந்தார்.
ஆனால் இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்தவித தயக்கமும் இல்லாமல் பதிலடி கொடுத்துள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்கா எந்த நாட்டுக்கு என்ன விற்க வேண்டும் என்பதை வேறு எந்த நாடும் தீர்மானிக்க முடியாது. எங்களின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கொள்கைகள் அமெரிக்காவின் தேசிய நலனின் அடிப்படையில்தான் இருக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், "துருக்கியும் அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளி நாடு. துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால், அமெரிக்கா தனது கொள்கையை மாற்றாது" என்றும் அவர் கூறியிருப்பது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை வாங்கியதால் துருக்கி மீது விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடைகளை தளர்த்துவது மற்றும் அந்த நாட்டை மீண்டும் F-35 திட்டத்தில் இணைப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானுடனான பதற்றம் நீடித்து வரும் இந்த சூழலில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் கோரிக்கையையே டிரம்ப் வெளிப்படையாக நிராகரித்திருப்பது, அமெரிக்கா–இஸ்ரேல் உறவில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

