சர்வதேச நீதிமன்றத்துக்கே தடை போட்ட ட்ரம்ப்.. நோபல் பரிசு கிடைக்காத விரக்தியா?
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நீதிமன்றம் அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை இந்தத் தடைகளை அறிவித்தார். அப்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கட்டுப்பாடின்றிச் செயல்படும் நீதிமன்றம் என்று அவர் விமர்சித்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாகவும், இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மீது போர்க்குற்ற வழக்குகளைத் தொடர முயற்சிப்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது. குறிப்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக இந்த நீதிமன்றம் கைது வாரண்டுகளைப் பிறப்பித்தது அமெரிக்காவின் அதிருப்திக்குக் காரணமாக உள்ளது.
இந்தத் தடைகளின்படி, அமெரிக்காவின் அதிகார வரம்புக்குள் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சொத்துகள் முடக்கப்படலாம். மேலும், அந்த நீதிமன்றத்துடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களும் தனிநபர்களும் தங்கள் தொடர்புகளை முடித்துக்கொள்ள ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றத்துடனான பரிவர்த்தனைகளைத் தடை செய்து, அதன் வளங்களை முடக்குவோம். அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் அதன் திறனைக் குறைப்போம்” என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கர்களுக்கு எதிராக இந்த நீதிமன்றம் வழக்குத் தொடர டொனால்ட் டிரம்ப் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தத் தடைகள் சர்வதேச சட்டத்துக்கும் உலக நாடுகளின் சட்ட ஒழுங்குக்கும் எதிரான தாக்குதல் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் தலைவர் டொமோகோ அகானே, எந்தவித அச்சுறுத்தலுக்கும் பணியாமல், சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் தொடர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 125 நாடுகளும் அதற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மொத்தத்தில், அமெரிக்காவுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் இடையிலான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டது. இவர் 2003 முதல் 2008 வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவில் நீதிபதியாகப் பணியாற்றிய போது , பாலஸ்தீனப் பகுதிகள் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.
