'போரை நிறுத்தம் செய்ய இஸ்ரேல் - ஈரான் விருப்பம்..' ஆனால் டிரம்ப் சொன்னது என்ன?
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என ஹைபா உள்ளிட்ட இஸ்ரேல் வடக்கு நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை மழை பொழிந்தது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்க, கடல்வழி பொருளாதார முற்றுகையும் தொடரும் நிலையில், இரு தரப்பும் போர்நிறுத்தத்துக்கு முன்வந்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது, பிப்ரவரியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதனால், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகம் முழுதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு மாதம் தாக்குதல் தொடர்ந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது.
முதல் கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தற்காலிக போர்நிறுத்தத்துக்கு பின், முதன்முறையாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வடக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஹைபா உள்ளிட்ட நகரங்களில் நடந்த தாக்குதலில், பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன. உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், "இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருதரப்பும் உடனடியாக ஒரு போர்நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்புகின்றன.. அறியாமையோ அல்லது முட்டாள்தனமோ இதற்கு இடையில் வராத பட்சத்தில், 'அமைதி'க்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னேறி வருகின்றன. எவ்வாறாயினும், ஒரு 'இறுதி ஒப்பந்தம்' எட்டப்படும் வரை, தற்போதைய கடல்வழி பொருளாதார முற்றுகையானது முழு பலத்துடன் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இனி காரியங்கள் மிக வேகமாக நகரும். இந்த விஷயத்தில் உங்களின் கவனத்திற்கு நன்றி!" என பதிவிட்டுள்ளார்.
இன்று காலை இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மீண்டும் பரஸ்பர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பதற்றம் உச்சமடைந்தது. இந்நிலையில், இரு நாடுகளும் உடனடியாகத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் விடுத்த முதல் கோரிக்கையை தொடர்ந்து, தற்போது இருதரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கைக்குத் தயாராகி வருவதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

