அமெரிக்கா இடைக்கால தேர்தல் தோல்வி - நெதன்யாகுவை கைகாட்டும் ட்ரம்ப்!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விளக்கிய ட்ரம்ப், இஸ்ரேல் மீதான அமெரிக்கர்களின் வெறுப்பு மற்றும் ஈரானுக்கு எதிரான போரின் தாக்கம் முக்கிய காரணங்களாக இருந்ததாக கூறியுள்ளார். இஸ்ரேலின் ஆதரவாளராக இருந்த ட்ரம்ப்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போரால் அமெரிக்க அரசியலில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் CBS தொலைக்காட்சிக்கு அளித்த 60 Minutes நேர்காணலில் பேசிய ட்ரம்ப், இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணங்கள் குறித்து விளக்கினார். அப்போது ஈரானுக்கு எதிரான போர், அமெரிக்காவில் அதிகரித்த பெட்ரோல் விலை மற்றும் இஸ்ரேல் மீதான அமெரிக்கர்களின் வெறுப்பு ஆகியவை தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணங்களாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெறுப்பு இருக்கிறது. அந்த நாட்டின் மீது மக்களுக்கு விருப்பமில்லாத நிலை அதிகரித்துள்ளது" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். .
இஸ்ரேலின் மிகப்பெரிய ஆதரவாளராகத் தன்னை முன்னிறுத்தி வந்த ட்ரம்ப்பே இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்க முடியாது என்றும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைதான் இஸ்ரேலைப் பாதுகாத்தது என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்றும், போரை நிறுத்திவிட்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது மீண்டும் போரில் ஈடுபட்டு தோல்வியைச் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

