ஈரானுக்கு 48 மணிநேரம் கெடுவிதித்த ட்ரம்ப்.. பகிரங்கமாக மிரட்டல்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர ultimatum வழங்கி, ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான், கப்பல்களை தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்ததால், எண்ணெய் வர்த்தகம் முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியை ஈரான் முடக்கி வைத்துள்ளது. மேலும் நீரிணை வழியாக செல்ல முயலும் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் எண்ணெய் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கையால் 1 பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விலை உயர்ந்திருக்கும் நிலையில், இந்தப் பாதிப்பை சரி செய்ய ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துள்ளது. ஆனாலும், அதிகளவிலான எரிபொருள் தேவையின் காரணமாக இந்தியா, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தசூழலில் தான் ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என ஈரானுக்கு 48 மணி நேரம் கெடுவிதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
48 மணிநேரம் கெடுவிதித்த ட்ரம்ப்..
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “இன்றிலிருந்து சரியாக 48 மணி நேரத்திற்குள், ஈரான் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால் அமெரிக்கா முதலில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தொடங்கி, இரானின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும்” என ட்ரம்ப் கூறியுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பரிசீலிப்பதாகவும், ஈரானை முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும், அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச ஈரானில் முக்கியத் தலைவர்கள் யாரும் இல்லை எனவும் கிண்டல் செய்திருந்த அதிபர் ட்ரம்ப் தற்போது ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

