'மீண்டுவர 5 ஆண்டு ஆகும்..' ஈரான் தாக்குதலால் பேரிழப்பு! புலம்பும் வளைகுடா நாடு!
ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவாக, கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் கத்தாரின் எரிவாயு உற்பத்தி 17% குறையும் என கத்தார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் சர்வதேச சந்தையில் LNG விலை 12% உயர்ந்துள்ளது. கத்தார், ஈரானின் தாக்குதலால் பிராந்திய பாதுகாப்பு சீர்குலைந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியாளர் - பிரவீன் ஜோஷ்வா
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கு இடையே இரண்டு வாரத்துக்கும் மேலான போர் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆரம்பத்தில் ராணுவ இலக்குகள் மட்டுமே தாக்கப்பட்ட நிலையில், ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில் உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்பு கொண்ட ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எரிவாயு வயல்கள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காது நிலையில், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள எரிவாயு வயல்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த சூழலில், கத்தார் எல்லைக்கு அருகே உள்ள கத்தாரின் மிக முக்கியமான எரிசக்தி மையமான ராஸ் லஃப்பான் (Ras Laffan) தொழிற்பேட்டையில் ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக கத்தார் குற்றம் சாட்டியுள்ளது.
ராஸ் லஃப்பான் (Ras Laffan) பகுதி உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையமாக விளங்குகிறது. இங்கிருந்தே இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 40% முதல் 45% வரை கத்தாரிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. இதனால் இந்தியாவுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ராஸ் லஃப்பான் மீதான இந்த தாக்குதலால், சர்வதேச சந்தையில் LNG விலை ஒரே நாளில் 12% உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான்-இஸ்ரேல் போரில் கத்தார் நடுநிலை வகித்த போதிலும், ஈரான் தொடர்ந்து எங்களை இலக்கு வைப்பது பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இந்தச் சேதங்களைச் சரிசெய்ய 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும், இதனால் கத்தாரின் எரிவாயு உற்பத்தித் திறன் 17% வரை குறையும் என்றும் கூறியுள்ளது.

