அமெரிக்கா| ”இப்படி நடக்கும்னு நினைக்கல” ட்ரம்ப் உத்தரவால் பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில், ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். அதன்படி, அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகள் மற்றும் விளையாட்டுகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடைவிதிக்க வகை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அவருடைய இந்த பாலின உத்தரவால் அமெரிக்க அலுவலகங்களிலும் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஸ்போர்ட் அலுவலகங்களில் 'M' (Male) அல்லது 'F' (Female) பெயர்களைக் கொண்ட பாஸ்போர்ட்களை மட்டுமே வழங்குகிறது. அதேநேரத்தில் மூன்றாம் பாலினத்தவரின் (X) விருப்பத்தை நீக்குகிறது.
இந்த அதிரடி நடவடிக்கை, திருநங்கையின் பாஸ்போர்ட்டையே மாற்ற வைத்துள்ளது. HBOவின் Euphoria நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர், Hunter Schafer. இவர், ஒரு திருநங்கை. இந்த நிலையில், வெளிநாட்டில் படப்பிடிப்பின்போது ஹன்டர் தனது ஒரிஜினல் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் மாற்று பாஸ்போர்ட்டை நாடியுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு புதிதாக வழங்கப்பட்ட அமெரிக்க பாஸ்போர்ட்டில் ஆண் என அடையாளம் காட்டப்பட்டுள்ளார். ஆனால், அவரது முந்தைய பாஸ்போர்ட்டில் அவர் பெண் என்று சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிருப்தி அடைந்துள்ள ஹன்டர், “புதிதாக வழங்கப்பட்ட அமெரிக்க பாஸ்போர்ட்டில் என்னை ஆண் என்று தவறாக அடையாளம் காட்டியுள்ளனர். விண்ணப்பச் செயல்பாட்டின்போது என்னை பெண் என அடையாளம் காட்டப்பட்டது. இப்படி, உண்மையில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.
என் பாஸ்போர்ட்டில் 'M' என்ற எழுத்தை வைப்பதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், இதன்மூலம் என் பாலினத்தில் எந்தப் பிரசனையும் வரப்போவதில்லை. ஆம், நான் திருநங்கை இல்லை என்பதில் உண்மையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஆனால் அது வாழ்க்கையை கொஞ்சம் கடினமான பிரச்னைகளை விளைவிக்கும். அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் கவலைகளை அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.