ரயிலில் ஏறக் காத்திருந்த மக்கள் நொடியில் நடந்த விபரீதம் ஒரே நாளில் 19 பேர் பலி!
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
உக்ரைனில் மக்கள் கூட்டமாக இருந்த ரயில் நிலைய நடைமேடையில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி, அந்நாட்டின் வேறு இரண்டு நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதல்கள் உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் டினிப்ரோ (Dnipro) நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து சபோரிஷியா நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த பயணிகள் ரயில், நடைமேடையில் நின்றுகொண்டிருந்தபோது, ஜெட் எஞ்சின் மூலம் இயங்கும் ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் மையப்பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கிரெமென்சுக் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் நடந்த தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர்ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கவும், புதிய நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
