\
pakistan
pakistanreuters

சோதனை மேல் சோதனை.. பாகிஸ்தானுக்கு அடுத்த அடி.. ஆண்டுக்கு 1.28 லட்சம் பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நச்சுக் காற்றால், மக்களின் ஆயுட்காலம் குறைவதுடன், மக்கள் முன்கூட்டியே உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அப்படி என்னதான் நடக்கிறது பாகிஸ்தானில்? காற்று மாசுபாட்டுக்கு காரணம் என்ன? பார்க்கலாம்..
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

பாகிஸ்தான் நாட்டில் காற்றின் தரம் குறித்து, பாகிஸ்தான் ஏர் குவாலிட்டி இனிஷியேட்டிவ் (PAQI) என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், அந்நாட்டில் நிலவி வரும் காற்று மாசுபாட்டின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள தகவலின்படி, காற்று மாசுபாட்டால் பாகிஸ்தான் மக்களின் சராசரி ஆயுட்காலம் 3.9 ஆண்டுகள் குறைவதாகவும், ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் முன்கூட்டியே உயிரிழப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளின் பொருளாதாரச் செலவு, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 6.5 சதவீதமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

air polution
air polutionreuters

இந்த ஆய்வு, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் ஆகிய பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவை ஆய்வு செய்துள்ளது. இதில், லாகூர் நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு காற்றில் கலந்திருக்கும் நுண்ணிய மாசுத் துகள்களான PM2.5-ன் வருடாந்திர சராசரி அளவு, ஒரு கனமீட்டருக்கு 110 மைக்ரோகிராம்களைத் தாண்டுவதாக அறிக்கை கூறுகிறது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள வருடாந்திர பாதுகாப்பு அளவான 5 மைக்ரோகிராம்களுடன் ஒப்பிடும்போது, இது 22 மடங்குக்கும் அதிகமாகும். இதன் காரணமாக, லாகூரில் தொடர்ந்து மாசடைந்த காற்றை சுவாசிக்கும் மக்களின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் வரை குறையக்கூடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

இவ்வளவு அதிகமான காற்று மாசுபாட்டுக்கு காரணம் என்ன? இந்தக் கேள்விக்கும் ஆய்வு பதில் அளித்துள்ளது. அந்நகரில் வாகனப் போக்குவரத்துதான் நுண்ணிய மாசுத் துகள்கள் வெளியேறுவதற்கான மிகப்பெரிய காரணமாக உள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு, இந்த காற்று மாசுபாடு மற்றொரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

air polution
air polutionreuters

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்துவது, தொழிற்சாலைகளின் மாசு வெளியேற்றத்தைக் குறைப்பது, செங்கல் சூளைகளில் தூய்மையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இந்த நடவடிக்கைகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், மாசு வெளியேற்றத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com