அமெரிக்கா | உலகப் புகழ்பெற்ற டிக்டாக் பிரபலம் கைதாகி பின் நாட்டிலிருந்தே வெளியேற்றம்! நடந்தது என்ன?
அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையில் பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் ஒன்று. இதற்காக, விசா கட்டுப்பாடுகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்தவர் காபி லேம். இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் காபி லேம் வெளியிட்ட டிக்டாக் வீடியோக்கள் மூலம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானார். இவருக்கு டிக்டக்கில் மட்டும் 162 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, விசா உள்ளிட்ட உரிய அனுமதிகளைப் பெற்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று லாஸ் வேகாஸ் நகரத்திலுள்ள ஹேரி ரெய்ட் பன்னாட்டு விமான நிலையத்தில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர், தனது விசாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்தால் கைது செய்யப்பட்டார். , கைதுக்குப் பின் அமெரிக்காவைவிட்டு வெளியேற சம்மதித்ததால் விடுவிக்கப்பட்டார். அதாவது, அவர்மீது நாடு கடத்தும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.