அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா.. பேரழிவிற்கான அறிகுறி!
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இடையே அமெரிக்கா அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்தியது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மினிட்மேன் 3 ஏவுகணை, ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டைவிட 20 மடங்கு சக்தி வாய்ந்தது. இதனால், ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தின. தொடர்ந்து தற்போது அஜர்பைஜான் நாட்டின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தசூழலில் தான் அமெரிக்கா அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பேரழிவிற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா..
ஈரான் தொடர்ந்து அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது அணுஆயுதம் ஏந்திச்சென்று தாக்கவல்ல மினிட்மேன் 3 என்ற வலிமை வாய்ந்த ஏவுகணையை அமெரிக்கா சோதித்துள்ளது. மினிட்மேன் ஏவுகணை ஏந்திச்செல்லும் அணுகுண்டு ஜப்பான் மீது அமெரிக்கா போட்ட குண்டைவிட 20 மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.
கலிஃபோர்னியாவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணித்து மார்ஷல் தீவு அருகில் கடலில் விழுந்து வெடித்தது. போர் நடைபெற்றுவரும் நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் நீண்டதூர ஏவுகணையை சோதித்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுவழக்கமான நடவடிக்கை என்றும் இதற்கும் போருக்கும் தொடர்பில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ளது

